குத்துச்சண்டையின் ஜாம்பவான் என உலகளவில் போற்றப்படும் முகமது அலி காலமானார். அவருக்கு வயது 74.
அமெரிக்காவின் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். முகமது அலி மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.
கடந்த 1980-ல் பார்கின்சன் நோயால் முகமது அலி பாதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சுவாசம் சார்ந்த பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அவரை அமெரிக்காவின் போனிக்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முகமது அலிக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை அளித்து வந்த பார்கின்சன்ஸ் சிறப்பு மருத்துவர் ஆப்ரகாம் லிபர்மென், அலியின் உடல் நிலை தொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டார். இந்நிலையில், அவரது உயிர் இன்று (சனிக்கிழமை) பிரிந்தது.
தொழில்முறை குத்துச்சண்டையில் உலகில் முடிசூடா மன்னராக வலம் வந்தவர் முகமது அலி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது இளமை காலங்களில் 61 போட்டிகளில் 56 வெற்றிகளை குவித்தார்.
மேலும் வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார். தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை எதிர்கொண்டார்.
1981-ல் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதன்பின்னர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. குத்துச்சண்டையையும் தாண்டி இவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான (அமெரிக்காவின் கறுப்பின) போராளி என்பதால் முகமது அலிக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இவரது மரண செய்தி அறிந்து பெரும் சோகம் அடைந்துள்ளனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments