இந்தியாவில் பிறந்த ஒருவரையும் தேசவிரோதி என்று சொல்லக்கூடாது, அப்படி சொல்வதை நான் எற்றுக்கொள்ளவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரபல டி.வி சேனல் நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர்கள் உட்பட பலரையும் தேசி விரோதிகள் எனவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தான் செல்லட்டும் என பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்கள் கூறி வந்தனர். அமிர் கான், ஷாருக்கான என பிரபல சினிமா நட்சத்திரங்களும் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறியபோது அவர்களை தேச விரோதிகள் எனவும், பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள் என பல பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவ்வாறு சொல்வது தவறு என்றும் இந்தியாவில் பிறந்தவர்களை தேசவிரோதிகள் என்று சொல்லக்கூடாது என ராஜ் நாத்சிங் தெரிவித்திருக்கிறார்.
இஷ்ரத் ஜஹான் எண்கவுன்டர் வழக்கு தொடர்பாக கேட்டதற்கு, "இஸ்ரத் ஜஹான் வழக்கு தொடர்பாக என்னுடைய கருத்தை பாராளுமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன் மேலும் அவ்வழக்கு தொடர்பாக பல ஆவணங்கல் தொலைந்துவிட்டது. இவ்வழக்கை மேலும் விசாரிப்பதற்கு விசாரணை கமிட்டியை ஏற்படுத்தியிருக்கிறேன். ஆனால் இது போலி என்கவுன்டராக நான் கருதவில்லை, மேலும் இவ்வழக்கு கோர்டில் உள்ளது. உளவுத்துறையும் மத்திய புலனாய்வுக்குழுவும் இவ்வழக்கு தொடர்பாக எதிரெதிராய் நிற்பது துரதிஷ்டவசமானது" என்று கூறினார்.
மத்திய புலனாய்வு குழுவில் (என்.ஐ.ஏ) மத்திய அரசின் தலையீடு இருக்கிறது, அதனால் தான் இந்துத்துவா தீவிரவாதிகள் பலரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதை ஏற்கமுடியாது. என்.ஐ.ஏ என்பது சுதந்திரமாக செயல்படும் புலனாய்வுக்குழுவாகும், எங்களுடைய அரசு பதவியேற்ற பிறகும் அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான எல்ல வழிவகைகளையும் செய்துள்ளோம். அவர்கள் தங்களது விசாரணை அறிக்கைகளை நேரடியாக சட்டத்துறைக்கே அளிக்கின்றனர் என்று தெரிவித்தார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் தொடர்பான பிரச்சனை பற்றி கேட்டபோது, ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை இருக்கிறது. அதே சமயம் எங்கு எழுப்பப்பட்ட கோஷங்கள் மிக வருத்தத்தை தருகிறது என்று கூறினார்.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் பல சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது. இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட எங்கள் மீது இல்லை, ஆனால் முந்திய காங்கிரஸ் அரசு ஊழலிலேயே திழைத்திருந்தது. வருகின்ற உத்திர பிரதேச தேர்தலில் பெரிய சாதனையை பா.ஜ.க படைக்கும், அதற்கான எல்லா வேலைகளிலும் இப்பொழுதே பா.ஜ.கவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாகவே உள்துறை அமைச்சராக இருப்பவர்கள் குறைவாகவே பேச வேண்டும். தேவைப்படும் போதும் அவசியமான காலகட்டத்தில் நான் மெளனம் காப்பதில்லை, அதே சமயம் நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக எந்த விமர்சனமும் செய்ய மாட்டேன் என்று கூறினார்.
No comments:
Write comments