தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் 2 நாட்களுக்கு அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்தரி வெயில் விடைபெற்ற பின்னர் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி, வெயில் பாரபட்சமின்றி கொளுத்துகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மட்டும் வெயிலின் அளவு கொஞ்சம் குறைந்து இருக்கிறது. மற்ற பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் அளவு அதிகமாகவே பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே வெப்பம் அதிகமாகவே காணப்படுகிறது.
கடல் காற்று உருவாகாததால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் 2 நாட்களுக்கு அதிகமாகவே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
கடலின் மேற்புரத்தில் குறைவான அளவிலேயே மேகக்கூட்டங்கள் இருக்கின்றன. அப்படி உருவாகும் மேகக்கூட்டங்களும் வெகு நேரத்துக்கு நிலைப்பதில்லை. இதனால் கடல் காற்று உருவாகுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும். மேகக்கூட்டங்கள் அதிகமாக சேர்ந்து கடல் காற்று உருவாகி மழை பெய்தால் மட்டுமே வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் மாலை நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். பகல் நேரத்தில் அதிகபட்சமாக 37 செல்சியல் (98.6 டிகிரி) வெயில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (நேற்று) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments