குமரி மாவட்டத்தில் ஜூன் முதல் தேதியில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் திறக்கப்படும் நிலையில் புதன்கிழமை அணைகள் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடியான கன்னிப்பூ சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள், அணைகள் திறப்பிற்காக காத்திருக்கின்றனர். இந்த சாகுபடிக்காக ஜூன் 1 ஆம் தேதி அணைகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், புதன்கிழமை அணைகள் திறக்கப்படவில்லை.
இது குறித்து மாவட்ட பாசனத்தார் சபை தலைவர் வின்ஸ் ஆன்டோ கூறியதாவது:
இம்மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசனத்துக்கு ஜூன் முதல் தேதியில் அணைகள் திறக்கப்பட்டுவந்தது. தற்போது அணைகளில் திருப்தியான அளவாக 50 சதத்திற்கும் அதிகமாக தண்ணீர் இருப்பு உள்ள நிலையிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயப் பணிகளில் தொய்வு ஏற்படும். மேலும் ஜூன் மாதத்திற்கு முன்பாக கால்வாய்கள் தூர்வாரப்படவேண்டும். ஆனால் நிகழாண்டு இதுவரை அப்பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேருவதிலும் சிக்கல் உள்ளது என்றார் அவர்.
பொதுப்பணித்துறை வட்டாரங்களில் கூறியதாவது: பாசனத்திற்காக அணைகளை திறக்கும் வகையில் தமிழக முதல்வருக்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து, மழையின் நிலை உள்ளிட்ட பல காரணிகளை ஆராய்ந்த பிறகே தண்ணீர் திறப்பதற்கு அனுமதி கிடைக்கும். தற்போது பரவலாக சாரல் மழை நீடிக்கும் நிலையில் முதற்கட்ட விவசாயப்பணிகள் தடையின்றி நடைபெறுகின்றன. பிரதான கால்வாயான தோவாளை கால்வாய் ஏற்கெனவே தூர்வாரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments