பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சென்னையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி செல்வதற்கு மாநகர அரசு பஸ்களையே நம்பி உள்ளனர்.
பள்ளிக்கு செல்லும் போதும் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பஸ்சில் தொங்கிய படியே பயணம் செய்த 3 பேர் கடந்த ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இது போன்ற உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
இதேபோல் மாணவர்களின் படிக்கட்டு பயணத்தால் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ்டிரைவர்கள், கண்டக்டர்கள் மட்டுமல்லாமல் போலீசாரும் சாலைகளில் நின்று மாணவர்களை எச்சரித்து பஸ்சுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தும் மாணவர்களின் படிக்கட்டு பயணம் மட்டும் முடிவுக்கு வந்தபாடில்லை. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பயண அட்டையை ரத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் இதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments