நெல்லை: இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை என்று ஆவேசமாக, சிறைச்சாலையில் ராம்குமாருடனான கடைசி சந்திப்பில் என்ன நடந்தது என்பது பற்றி அவரது வழக்கறிஞரான ராம்ராஜ் விளக்கி உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி காலை மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளியை போலீசார் தேடி வந்த நிலையில், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தனர்.
ஆரம்பம் முதலே சுவாதி கொலை வழக்கு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இடையில், வெளிநாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு மேலும் சர்ச்சையைக் கிளப்பினார். இந்த கொலை வழக்கு குறித்து தகவல்களை வெளியிட்டு வந்த மகேந்திரன் திலீபன் என்பவர், சிறைக்குள் கடுமையாக தக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
இந்த சூழலில், புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமாரை ஜாமீனில் எடுக்க அவரது வழக்கறிஞரான ராம்ராஜ் நடவடிக்கை எடுத்து வந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், ராம்குமார் மர்மமான முறையில் நேற்று புழல் சிறையில் மரணம் அடைந்துள்ளார்.
சிறையில் இருந்த ராம்குமாரை கடைசியாக சந்தித்துவிட்டு வந்தவரான வழக்கறிஞர் ராம்ராஜிடம் பேசினோம். ராம்குமார் மரணம் பற்றிய தகவல் கிடைத்ததில் இருந்து மிகுந்த துயரத்தில் இருந்த அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, ‘சிறைக்குள் ராம்குமார் என்ன மனநிலையில் இருந்தார்? அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்தாரா? வேறு ஏதாவது தகவல் ராம்குமார் சொன்னாரா?’ என பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
அப்போது, மிகுந்த மன வேதனையுடன் பேசத் தொடங்கிய வழக்கறிஞர் ராம்ராஜ், ''மனிதனைக் கொல்லும் மின்சாரம் சிறைக்குள் எப்படிங்க வரும்? அங்கு இருக்கும் மின்சாரத்தை ஒருவேளை தொட்டதாக எடுத்துக் கொண்டால்கூட, அது ஷாக் அடித்து தூக்கி வீசுமே தவிர கொல்லாது. ஆனால், ராம்குமார் மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டதாக சொல்வது நம்பும்படியாகவா இருக்கிறது?
ராம்குமாரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததுமே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையின் குறிப்புகளில் இருக்கிறது. அப்படி உயிரிழந்த பிறகும் அவருக்கு ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டு இருக்கிறது. இறந்தவருக்கு எதற்காக ஈ.சி.ஜி எடுத்தார்கள்? ராம்குமார் தற்கொலை செய்யவில்லை. அவரை கொலை செய்துவிட்டார்கள். சிறைக்குள் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார். அந்த உண்மையை மறைத்து, அவர் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொய் சொல்கிறார்கள்.
ராம்குமார் சிறைக்குள் தற்கொலை செய்யும் அளவுக்கு மன அழுத்தத்தில் இருக்கவில்லை. பொய்யான குற்றச்சாட்டுக்காக சிறைக்குள் வந்துவிட்டோமே என்கிற வருத்தம்தான் அவருக்கு இருந்ததே தவிர, தற்கொலை செய்யும் அளவுக்கு அவர் இருக்கவில்லை. கடைசியாக அவரைச் சந்தித்தபோது கூட, ‘சீக்கிரமே வெளியே வரவேண்டும். இந்த பொய் வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும். வாழக்கையில் பெரிய ஆளாக வேண்டும்’ என பல ஆசைகளை வெளிப்படுத்தினார். அவர் சாகும் மனநிலையில் இருக்கவே இல்லை.
ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுவதை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன். அந்த மனநிலையில் அவர் இல்லை என்பது, அவரை அடிக்கடி சந்திக்கின்ற எனக்குத் நன்றாகத் தெரியும். மிகத் தெளிவான மனநிலையில் இருந்த ராம்குமார், தற்கொலை செய்திருக்க வாய்ப்பே கிடையாது. அவருக்கு, நம்மை இப்படி பொய்யான ஒரு வழக்கில் சிக்க வைத்து சிறைக்குள் தள்ளி விட்டார்களே என்கிற வருத்தம்தான் இருந்தது. தனது குடும்பந்தினருக்கு அவப்பெயர் தேடித் தந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவரிடம் இருந்தது. ஆனால், தற்கொலை செய்யும் அளவுக்கு அவர் மனப்போராட்டத்தில் இல்லை.
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் பேசும்போது எல்லாம், ‘இந்த கொலைக்கும் உங்களுக்கும் ஏதாவது சின்ன தொடர்பு இருந்தாலும் சொல்லுங்க?’ என கேட்டிருக்கிறேன். அவர் தொடக்கத்தில் இருந்தே, இந்த கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னிடம் திட்டவட்டமாக சொல்லி வந்திருக்கிறார். ‘சுவாதியை பார்த்ததே இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்புமே கிடையாது. அவரை ஒருதலையாக காதலித்ததாகவும் தினமும் அவரை பின்தொடர்ந்து சென்றதாகவும் சொல்வது உண்மையில்லை. சுவாதி அழைத்ததாலேயே சென்னைக்கு வந்ததாக பரப்பப்பட்ட தகவலும் பொய். அந்த பெண்ணை யாரென்றே எனக்கு தெரியாது’ என்று பலமுறை ராம்குமார் என்னிடம் சொல்லி இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு ராம்குமாரை அவரது பெற்றோர் வந்து சிறையில் சந்தித்து பேசினார்கள். அப்போதுகூட அவர்களிடமும் இதே தகவலைத்தான் ராம்குமார் சொல்லி இருக்கிறார். தற்கொலை செய்யும் மனநிலையில் அவர் ஒருபோதும் இருக்கவில்லை. அவரிடம் பேசிவிட்டு வந்த பெற்றோர் என்னிடம், ‘இந்த கோரச் சம்பவத்தில் சிக்க வைக்கப்பட்டு இருக்கும் என்னோட மகனை நீங்க தான் காப்பாற்ற வேண்டும். அவனை உங்க பிள்ளையா நினைச்சு பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டு போனார்கள்.
இப்போது ராம்குமார மரணம் அடைந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும், ஒரு அப்பாவிக்கு சட்டமும், நீதித்துறையும் இப்படி அநியாயமாக அநீதி செய்துவிட்டதே என்கிற ஆதங்கம் இருக்கு. இந்த வழக்கின் விசாரணையின்போது பல உண்மைகள் வெளியே வரும் என்பதால் ராம்குமாரை பேசவிடாமல் செய்ய ஆரம்பத்திலேயே அவரின் கழுத்தை அறுத்தார்கள். அதில் அவர் பிழைத்துக் கொண்டார் என்பதால் இப்போது அவரை கொன்று விட்டார்கள்.
சுவாதி கொலை வழக்கின் உண்மையை திட்டமிட்டு மறைக்க நடக்கும் இந்த சம்பவங்கள் பற்றி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சாசனத்தின்படி இந்த விவகாரத்தில் நீதிமன்றம் செயல்பட வேண்டும். ராம்குமார் கொல்லப்பட்டது தொடர்பாக உரிய நியாயம் கிடைகும்வரை நான் ஓயமாட்டேன்" என்றார் ஆவேசமாக.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments