லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வலது முழங்காலில் காயம் அடைந்ததால் லீக் சுற்றுடன் தோல்வி கண்டு வெளியேறினார். முழங்காலில் ஆபரேஷன் செய்து கொண்ட சாய்னா உடல் தகுதி பெற்று வருகிறார். வருகிற 15-ந் தேதி தொடங்கும் சீன ஓபன் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டு இருக்கும் சாய்னா பெங்களூருவில் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். ஆனால் முன்பு போல் அவரால் சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் 26 வயதான சாய்னா நேவால் இணையதளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘என்னால் மீண்டும் களம் திரும்ப முடியாது என்றும் எனது விளையாட்டு வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டது என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். எனது ஆழ் மனதிலும் எனது பேட்மிண்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடலாம் என்று சில சமயங்களில் தோன்றத்தான் செய்கிறது. எல்லாம் எப்படி அமைகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். என்ன நடக்கும் என்பது யாருக்கு தான் தெரியும்.
என்னை பொறுத்தவரை தற்போது எனது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது. எப்படி நல்ல உடல் தகுதியை எட்டுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதுபோன்ற காயங்கள் மிகவும் வேதனையானது. அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகள் என்ன செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து நான் செயல்பட போவதில்லை. அடுத்த ஆண்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன்’ என்றார்.
சாய்னாவின் இந்த பேட்டியை பார்த்த பலரும் சமூக வலைதளத்தின் மூலம் அவருக்கு வாழ்த்தும், நம்பிக்கையும் தெரிவிக்கும் வகையில் செய்திகளை பகிர்ந்துள்ளனர். அதில், ‘இதனை புதிய தொடக்கமாக நினைத்து தைரியமாக செயல்படுங்கள். நீங்கள் இன்னும் சாதிக்க வேண்டி இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து இருக்கும் சாய்னா பழைய நிலைக்கு திரும்ப கடினமாக உழைப்பேன் என்று பதில் அளித்துள்ளார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments