பொதுவாக ஆவின் பாலை விட தனியார் பால் விலை அதிகமாகவே இருந்து வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் பால் விற்பனை விலை அதிகரித்துள்ள நிலையில் திருமலா நிறுவனம் மீண்டும் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது பால் உற்பத்தி தாராளமாக நடந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவின் பால் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை, வாகன எரிபொருள் விலை உயரவில்லை.
இந்த நிலையில் எந்த ஒரு காரணத்தையும் குறிப்பிடாமல் ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் திருமலா நிறுவனம் இன்று முதல் தங்களுடைய பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு கடந்த சனிக்கிழமை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழகத்தில் ஏற்கனவே இருந்து வரும் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா நிறுவனம் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் முதல் வாரத்தில் தங்களுடைய பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 வீதம் மொத்தம் ரூ.4 வரை உயர்த்தியது.
இதே போன்று பன்னாட்டு பால் நிறுவனமான திருமலா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்த வித முன்னறிவிப்பும் வெளியிடாமல் 200 கிராம் தயிர் பாக்கெட்டில் 0.25 அளவை குறைத்து ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் 57 காசுகள் வரை மறைமுகமாக விலையேற்றத்தை மக்கள் மீது திணித்தது. அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் பால் விற்பனை விலையையும் உயர்த்தியது.
இதர பால் நிறுவனங்களும் தங்களது பால் மற்றும் தயிருக்கான விலையை ஒரு சில நாட்களில் உயர்த்தும் ஆபத்து உள்ளது. எனவே இந்த தனியார் பால் விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பால் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்திட வேண்டும்.
தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை முன் வைத்தும் பதில் வராத சூழ்நிலையில், இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சரை சந்தித்து ‘ஆட்டோ கட்டணம் மற்றும் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு வரன்முறைபடுத்தியது’ போன்று அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்றிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதோடு, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கும் இதனை கொண்டு செல்ல இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments