காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வாக்காளர்களுக்கு கடந்த 3 நாட்களாக நன்றி சொல்லி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று 2016-ம் ஆண்டிற்கான கட்சியின் விருதுகள் பெறுவோர் பட்டியலை அறிவித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2007-ம் ஆண்டு முதல் விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபடும் சான்றோருக்கும், அரசியல், சமூகம், இலக்கியம், பண்பாட்டு தலங்களில் சிறப்பாக பணியாற்றுவோருக்கும் விருதுகள் வழங்கி வருகிறோம்.
கலைஞர் கருணாநிதி, நல்லக்கண்ணு, கி.வீரமணி, டாக்டர்.ராமதாஸ், அருந்ததி ராய் போன்றோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து இருக்கிறோம்.
இந்த ஆண்டு 10-வது ஆண்டாக இவ்விழாவை நடத்துகிறோம். வருகிற 21-ந் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் இவ்விழா எனது தலைமையில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியல் வருமாறு:
அம்பேத்கார் சுடர் விருது: நீதிபதி கே.சந்துருவிற்கும்,
பெரியார் ஒளி விருது: முனைவர் வசந்தி தேவிக்கும்,
காமராஜர் கதிர் விருது: மறைந்த எல். இளைய பெருமாளுக்கும்,
அயோத்திதாஸ் ஆதவன் விருது: பத்திரிகையாளர் ஞானிக்கும்,
காயிதே மில்லத் பிறை விருது: மறைந்த பாடகர் நாகூர் ஹனிபாவுக்கும்,
செம்மொழி ஞாயிறு விருது: கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்படுகிறது.
விருது பெறுவோருக்கு பாராட்டு பட்டயமும், ரூ.50 ஆயிரம் பண முடிப்பும் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் அயோத்திதாசர் ஆதவன் விருது பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments