டெல்லி மேல்-சபை எம்.பி.க்களாக மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, பியூஷ் கோயல் மற்றும் ப.சிதம்பரம், சரத் யாதவ், லாலுவின் மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் தேர்வாகி இருக்கின்றனர்.
ப.சிதம்பரம்:
டெல்லி மேல்-சபையில் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த சில மாதங்களில் நிறைவடைகிறது. உறுப்பினர்களின் காலியிடங்களை நிரப்ப வருகிற 11-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மராட்டிய மாநிலத்தில், 6 காலியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜனதா தரப்பில், மத்திய மந்திரி பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுத்தே, விகாஸ் மகாத்மே ஆகியோரும், சிவசேனா தரப்பில் சஞ்சய் ராவுத் எம்.பி.யும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் பட்டேலும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால், ப.சிதம்பரம் உள்ளிட்ட 6 பேரும் டெல்லி மேல்-சபை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகி இருக்கின்றனர்.
சுரேஷ் பிரபு:
ஆந்திர மாநிலத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் களம் இறங்கிய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் மத்திய மந்திரி ஒய்.சத்யநாராயணா சவுத்ரி, டி.ஜி.வெங்கடேஷ், வி.விஜய்சாய் ரெட்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சரத் யாதவ்:
பீகாரில், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் சரத் யாதவ், ராமச்சந்திர பிரசாத் சிங் ஆகியோரும், ராஷ்டிரீய ஜனதாதளம் சார்பில் போட்டியிட்ட லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட கோபால் நாராயண சிங் ஆகிய 5 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அம்பிகா சோனி:
பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய முன்னாள் மத்திய மந்திரி அம்பிகா சோனி, அகாலிதளம் வேட்பாளர் பல்விந்தர் சிங் புந்தர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தில் ஒரே ஒரு இடத்துக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்ட அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் புருஷோத்தம் ருபாலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
சத்தீஷ்கார் மாநிலத்தில், பா.ஜனதா வேட்பாளரான அக்கட்சியின் தேசிய செயலாளர் ராம்விசார் நேதம், காங்கிரஸ் வேட்பாளர் சாயா வர்மா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments