தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந்தேதி வருகிறது. இந்த ஆண்டு 93-வது பிறந்த நாளை கொண்டாடும் கருணாநிதியை, 3-ந் தேதி காலையில் குடும்ப உறவினர்கள் வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து முக்கிய கட்சி நிர்வாகிகளும் சென்று சந்தித்து வாழ்த்து கூறுகின்றனர்.
காலை 7 மணிக்கு கருணாநிதி, கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். 7.15 மணிக்கு வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்துகிறார்.
அதன்பின்னர் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து ‘காலை உணவு’ சாப்பிட்டு விட்டு முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் செல்லும் கருணாநிதி அங்குள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் திரளாக வருவார்கள் என்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
3-ந்தேதி இரவு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார். பகுதிச் செயலாளர்கள் மதன் மோகன், ஏ.ஆர்.பி.எம்.காம ராஜ் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.
முடிவில் மா.பா.அன்பு துரை, வெங்கடேசன் நன்றி கூறுகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு கருணாநிதி தொண்டர்களை சந்திப்பதால் அவரது பேச்சு எழுச்சியுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments