எல்லோரையும் சிரிக்க வைத்த நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பி அழ வைக்கின்றனர் என நடிகர் செந்தில் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருச்சியில் நடிகர் செந்தில் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது. அதிர்ச்சி அடைந்த அவர் தான் நலமுடன் இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது. இதனால் கடும் மன உளைச்சலடைந்த அவர் நேற்று மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். அ.தி.மு.க வில் தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறேன். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு வந்தேன். அப்போது நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் மீண்டும் தகவல் பரவுவதாகக் கேள்விப்பட்டேன். வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
திமுகவினர்தான் காரணம்:
நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் எல்லோரையும் சிரிக்க வைத்து பழக்கப்பட்டவன். ஆனால், இப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக என்னை அழ வைக்கின்றனர். இதன் பின்னணியில் தி.மு.க. வினர்தான் இருப்பதாக சந்தேகிக்கின்றேன். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக நான் பிரச்சாரம் செய்ததால், தற்போது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவினர்தான் நான் இறந்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர் என்றார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments