அலகாபாத்: உத்தரபிரதேசம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நடத்தப்பட்டுவரும் பள்ளிகளில் அதிக அளவில் முஸ்லிம் மாணவ மாணவிகள் பயின்று வருவதாக ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
உ.பி மாநிலம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 7000ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் 30% முஸ்லிம் மாணவ மாணவிகளின் பள்ளி சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆர். எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
இந்துத்துவா கொள்கையை தங்களின் சித்தாந்தமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் இந்து மத ஸ்லோகங்களையும், மந்திரங்களையும் காலை வகுப்பறை துவங்குவதற்கு முன் மற்ற மாணவர்களைப்போல பாடுவதாகவும், இதனால் அவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் திறம்பட செயல்படுவதாகவும், பெரும்பாலான மாணவ மாணவிகள் கிராமப்புரத்திலுள்ளவர்கள் எனவும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
சரஸ்வதி மந்திர் மற்றும் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகளின் நிர்வாகிகள் கூறும்போது தங்களது பள்ளிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவ மாணவிகள் தங்கள் பள்ளிக்கு விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் கெளரவம் பெற்றுத்தந்துள்ளனர், கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர் என கூறுகின்றனர்.
இப்பள்ளிகளின் மாநில நிர்வாகி சிந்தாமனி சிங் கூறும்போது, "எங்களது பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் தேசிய அளவில் பல விளையாட்டுப்போட்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான காமன்வெல்த் போட்டிகளில் பங்கெடுத்து பல பதக்கங்களை வென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
ஆர்.எஸ். எஸ் பள்ளிகளில் இஸ்லாமிய குழந்தைகள் படிக்கும் இந்த விகிதாச்சாரத்தை பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற பொய் பிரச்சாரத்தை முறியடிப்பதாக உள்ளது என சிங் தெரிவித்தார். காலையில் சூர்ய நமஸ்காரம் முதற்கொண்டு வந்தே மாதரம் பாடல்கள் வரை அனைத்தையும் இந்த மாணவர்கள் படிக்கிறார்கள் என்றார். இவர்கள் அனைவரும் மற்ற சக மாணவர்களோடு சகஜமாகவே பழகுகின்றனர். மொத்தம் 4672 மாணவர்களும், 2218 மாணவிகளும் 12ஆம் வகுப்பு வரை எங்களது பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது வித்யா பாரதி பள்ளிகளில் 8 முஸ்லிம் ஆசிரியர்களை நியமித்துள்ளோம் என்றார் சிந்தாமனி சிங்.
எங்கள் பள்ளிகளை இஸ்லாமியர்கள் அதிக அளவில் நாடி வருவதற்கு காரணம் எங்கள் பள்ளிகளின் நடைமுறைப்படுத்தப்படும் கல்வித்தரம் தான் முக்கிய காரணம். ஆகவே தான் முஸ்லிம்கள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதிக அளவில் எங்கள் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். கடந்த மாதம் அஸ்ஸாமில் ஆர்.எஸ்.எஸ் பள்ளியில் படித்த முஸ்லிம் மாணவன் உயர்நிலை பள்ளித்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான். ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல, இத்தகைய பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது என்றார் சிந்தாமனி சிங்.
No comments:
Write comments