சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நானும், துணை தலைவர், கொறடா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் சபாநாயகரை அவரது அறையில் சந்தித்தோம். தலைவர் கலைஞர் சட்டமன்றத்துக்கு வந்து பங்கேற்கும் வகையில் அவருடைய வீல்சேர் சட்டசபைக்குள் வரும் வகையில் வசதி செய்து தருமாறு ஏற்கனவே கடிதம் கொடுத்து இருந்தோம். இப்போதும் அதை வலியுறுத்தினோம்.
ஆனால் இப்போது அவருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கைக்கு வீல்சேர் வந்து செல்ல முடியாத அளவில் 2-வது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
எனவே வீல்சேர் வந்து செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டோம். இது போல் 89 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தி.மு.க. எதிர்க்கட்சி பொறுப்பில் உள்ளது. எங்களது உறுப்பினர்களுடன் கலந்து பேசி 89 பேர்களும் உட்கார்ந்து பேசும் அளவுக்கு சட்டசபை வளாகத்தில் அறையை ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்து இருக்கிறோம்.
நாங்கள் சொன்ன கோரிக்கைகளை இதுவரை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை. இதையெல்லாம் நாங்கள் சுட்டிகாட்டி சபாநாயகரிடம் பேசிவிட்டு வந்துள்ளோம். மேலும் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் பதில் உரை சொல்லும் நாளில்தான் எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த முறை அதையும் சபாநாயகர் மாற்றி முதல்-அமைச்சர் பேசுவதற்கு முதல் நாளே எதிர்க்கட்சி தலைவர் பேசி விட வேண்டும் என்று கூறுகிறார்.
அலுவல் ஆய்வு கூட்டத்தில் எங்களிடம் இதை சொல்லிய போது நாங்கள் அதை ஏற்கவில்லை. இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் சட்டமன்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் இதை ஏற்க முடியாது என்றனர்.
இவ்வாறு செய்தால் எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய மரியாதையை சிதைக்கிற வகையில் அமைந்து விடும் என்றும் எடுத்து சொன்னோம். இது மட்டுமல்ல சட்டமன்றத்தில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் குறைந்தபட்சம் 3 தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றோம். ஆனால் 2 பேர் தான் பேச முடியும் என்று சபாநாயகர் சொல்கிறார்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. தோழமை கட்சிகள் அனைவரும் பேச வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த முறை சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 89 பேர் இருப்பதால் வேண்டுமென்றே திட்டமிட்டு 3 பேர் பேச முடியாது 2 பேர்தான் பேச வேண்டும் என்று சபாநாயகர் கூறுகிறார். இதையும் நாங்கள் ஏற்கவில்லை. 3 பேர் பேச வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். நாங்கள் வலியுறுத்தி இருக்கும் கோரிக்கைக்களுக்கு திருப்திபடும் வகையில் எந்த நடவடிக்கையும் இல்லை. பரிசீலிக்கிறோம் என்று மட்டும் சபாநாயகர் கூறுகிறார்.
எனவே இதில் தி.மு.க. மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது பற்றி எங்கள் தலைவர் கலைஞருடன் கலந்து பேசி அறிவிப்போம். இந்த ஆட்சியில் பெருந்தன்மை என்பது கொஞ்சமும் இல்லை. இரங்கல் தீர்மானம் இன்று எஸ்.எம்.சீனுவேலுக்கு (திருப்பரங்குன்றம் தொகுதி) கொண்டு வந்து நிறைவேற்றிய பின் சபையை ஒத்தி வைத்து உள்ளார்கள்.
இதே அவையில் கடந்த 2001-ம் ஆண்டு காளிமுத்து சபாநாயகராக இருந்தபோது சைதாப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் மறைந்த சமயத்தில் சபையை ஒத்தி வைக்க கேட்டோம். ஆனால் ஒத்திவைக்கவில்லை. ஆனால் இப்போது சபையை ஒத்தி வைத்தது பற்றி நாங்கள் கேள்வி எழுப்பி இருக்க முடியும். ஆனால் எழுப்பவில்லை. பெருந்தன்மையாக நடந்து கொண்டோம் என்று கூறினார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments