கடந்த சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர், முதன்முதலாக தனது தேர்தல் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததோடு, அதை ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ஆலூர் ஷா நவாஸ். இவர் அந்த தேர்தலில் சுமார் 20,000 வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தனது தேர்தல் கணக்கை முதன்முதலாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறார். அத்தோடு, தனது ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் பதிவு செய்திருக்கிறார்.
ஃபேஸ்புக் பதிவு:
''அன்பு நண்பர்களே..
தேர்தல் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் 17-06-2016 அன்று தாக்கல் செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஒப்புகையை பெற்ற பிறகு, 18-06-2016 அன்று (நேற்று) தலைவரை நேரில் சந்தித்து கணக்குகளை ஒப்படைத்தேன்.
குன்னம் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டவுடன் 20-04-2016 அன்று, தேர்தல் நிதி வேண்டி மக்களிடம் கோரிக்கை வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று வந்த தொகை சுமார் 16 லட்சம் ரூபாய் ஆகும். தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட செலவுக் கணக்கு 14,66,555/- ரூபாய் ஆகும். இந்த செலவுகள் தேர்தல் ஆணையம் வரையறுத்த நாட்களுக்குள் செலவு செய்யப்பட்டவை மட்டுமே. அதற்கு முன்னரும் பின்னருமான செலவுகள், எஞ்சிய தொகையிலிருந்து செய்யப்பட்டுள்ளன. இதுபோக, தேர்தல் செலவுகளுக்காக நண்பர்களிடம் கடனாகப் பெற்ற சுமார் 2 லட்சம் ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போன்ற எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடாமல், தேர்தல் ஆணையம் வரையறுத்த அடிப்படையான தேவைகளுக்கே பணம் செலவிடப்பட்டுள்ளன. எனது வேண்டுகோளை ஏற்று உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி.
தேர்தல் முடிந்தாலும் தேர்தல் தொடர்பான பணிகள் முடியவில்லை. வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவித்தல், மக்கள் பிரச்னைகளுக்காக தொகுதிக்கு அடிக்கடி சென்று வருதல் என பயணம் தொடர்கிறது. உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் வேண்டும்.
மிக்க அன்புடன்,
ஆளூர் ஷாநவாஸ்''
இவ்வாறு அதில் கூறியுள்ளார். நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கூறிய உண்மை பேச்சும், அறிவுத்திறனும், மாறாத புன்னகையும் இவரது அடையாளம் என்றால் அது மிகையாகாது. இந்த காலகட்டத்தில் இப்படியொரு அரசியல்வாதியா என்று நம்மை நெகிழ செய்கிறது இவரது ஒவ்வொரு நடவடிக்கையும். தொலைக்காட்சிகளில் விவாதத்தின் போது இவர் எடுத்து வைக்கும் கருத்துகளும், உவமைகளும், கேள்வி கேட்கும் விதமும், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமும் எதிர் தரப்பு மட்டுமின்றி அரசியலுக்கு வர நினைக்கும் இளைய தலைமுறையினரையும், அரசியலே வேண்டாம் என இருப்பவர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்தவித அரசியல் குடும்ப பின்னணியும், பண, பதவி பலமும் இல்லாமல் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே எந்த ஒரு வாக்காளருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், இன்னும் சொல்ல போனால் மக்களிடமே தன் தேர்தல் செலவுக்கு வெளிப்படையாக சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி கேட்டு, அதையே மிக நேர்மையாக தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு செலவு செய்து சுமார் 20,000 வாக்குகளுக்கு மேல் வாங்கியது அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஆலூர் ஷா நவாஸ் மேலுள்ள நம்பிக்கையும், அடுத்த தேர்தலில் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளது என சொன்னால் அது மிகையாகாது.
வெற்றியோ தோல்வியோ மக்கள் மனதில் இடம் கிடைப்பது மிக அரிது. அதுவே மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. உங்கள் சேவை மேலும் எழுச்சியுடனும், இன்னும் உத்வேகத்துடனும் தொடர ஆன்லைன் ஊடகம் குழு சார்பாக வாழ்த்துக்கள் திரு. ஆலூர் ஷா நவாஸ்.
செய்தி மற்றும் கட்டுரை :: சாஹிப்...
No comments:
Write comments