உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி எம்.பியான யோகி ஆதித்யனாத் கடந்த 2 ஆண்டுகளில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை பேசி வருவதால் அவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தி வந்த போதிலும் இது தொடர்பாக மத்திய அரசு மெளனமாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது அவர் மற்றொரு சர்ச்சைக்குரிய பேச்சை பேசியிருக்கிறார். இம்முறை அன்னை தெரசாவையும் அவர் விட்டுவைக்கவில்லை.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஸ்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த அவர் கூறும்போது "அன்னை தெரசா இந்தியாவை கிறிஸ்தவ நாடாக தீவிர முயற்சி செய்திருக்கிறார். கொல்கத்தாவில் தங்கியிருந்து அவர் செய்த செயல்கள் தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அது பிரதிபலித்து வருகிறது. இம்மாநிலங்களில் இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் போக்கு அதிகமாக நடந்து வருகிறது. இதனால் நாகலாந்து, மேகாலயா, திரிபுரா அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிரிவினை வாதிகளில் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகிறது.
கைரானா மாவட்டத்தில் உயிருக்கு அஞ்சி இந்துக்கள் கூட்டம் கூட்டமாக ஊரை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என எங்கும் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள். இந்துக்கள் விரட்டப்படும்போது மதச்சார்பின்மை பேசுவோர்கள் வாய் திறப்பதில்லை. கைரானா மாவட்டத்தில் இந்துக்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டதற்கு காரணம் இத்தகைய போலி மதச்சார்பின்மை வாதிகளே. இதனால்தான் அங்கு 68% இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 8% ஆகிப்போனது. இவ்வாறு அவர் பேசினார்.
அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. பாபர் மசூதியை இடிக்கும்போது தடுக்க முடியாதவர்கள், இராமர் கோயில் கட்டுவதை தடுத்துவிட முடியுமா? என மேலும் அவர் பேசினார். யோகி ஆதித்யனாத்தின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேவை ஒன்றை மட்டுமே தனது வாழ்வின் குறிக்கோளாக இருந்து செயல்பட்ட அன்னை தெரசாவை கொச்சைப்படுத்தி பேசியது அனைத்து தரப்பு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னை தெரசா ஏழைகளுக்கு உதவுதாக கூறி கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றினார் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments