Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 22, 2016

இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை - அர்ஜுன் சம்பத்


தமிழகத்தில் ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்று இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக பல்வேறு துறை மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாளிகை ஆகியவற்றில் மனு அளிப்பதற்காக அர்ஜுன் சம்பத்தும் அவரது கட்சியின் மாநில அமைப்புக் குழுத் தலைவர் பொன்னுசாமியும் தில்லி சென்றுள்ளனர். இதையொட்டி, செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் புதன்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 10 நாள்களில் ஹிந்து இயக்கப் பிரதிநிதிகள் மீது வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியில் ஹிந்து முன்னணி செயலர் சங்கர் கணேஷ் ஜிகாதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹிந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மண்டலத் தலைவர் தர்மாவின் வீடு தாக்கப்பட்டு அவரது கார் எரிக்கப்பட்டுள்ளது. செஞ்சியில் விநாயகர் சதுர்த்தியின் போது, அங்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் பந்தல் மற்றும் விநாயகர் சிலை எரிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் சூரி தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இதுபோன்ற சம்பவங்களால் தமிழகத்தில் ஹிந்து இயக்கத் தலைவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு ஹிந்து இயக்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம்.

சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை சம்பவத்தை பயன்படுத்தி தமிழர்களின் ஒற்றுமை, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை சீர்குலைக்க குறிப்பிட்ட சில இயக்கங்கள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். அந்த வாரியத்தில் நடுநிலையாளர்கள், விவசாயிகள், நீர் வளப் பொறியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கோரி மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

இந்தியாவின் மிகப் பெரிய அடையாளமாக ராமானுஜர் திகழ்கிறார். ஒருமைப்பாட்டு உணர்வுக்காகவும் ஜாதிக்கு எதிராகவும் குரல் கொடுத்த அவரது பிறந்த நாளை தேசிய விழாவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் செயலகத்திலும் மனு அளித்தோம்.

மியான்மரில் எல்லை தாண்டி இந்திய ராணுவம் ஊடுருவி பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது போல, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள ஆயுதக் குழுக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் மனு அளித்துள்ளோம்.

அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி காஷ்மீர் தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. காஷ்மீரில் வாழ்ந்த ஹிந்துக்கள் சொந்த மண்ணில் இருந்து 1990-களில் விரட்டி அடிக்கப்பட்டனர். அந்த மக்களை மீண்டும் ஸ்ரீநகரில் குடியேற்றும் வகையில், சலோ காஷ்மீர் என்ற பெயரில் ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை ஹிந்து அமைப்புகள் நடத்தவுள்ள பேரணியில் ஹிந்து மக்கள் கட்சி பங்கேற்கும்.

இலங்கையில் பாரம்பரிய சிவன் கோயில்களைப் புத்தர் கோயில்களாக மாற்றவும், தமிழர் வசிப்பிடங்களில் சிங்களர்களை குடியேற்றவும் அந்நாட்டு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 23-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஹிந்து மக்கள் கட்சி சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார் அர்ஜுன் சம்பத்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic