சென்னை: நடிகர் சங்க மோதல் சர்ச்சைகளால் இந்த மாத இறுதியில் நடக்க வேண்டிய பொதுக்குழுவை தள்ளிவைக்க ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழு:
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு செப்டம்பர் மாதம் கூடுவது வழக்கம். கடந்த வருடம் தேர்தல் நடந்ததால் திட்டமிட்டபடி அது நடக்கவில்லை. புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்ற பிறகு மார்ச் மாதம் பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். இந்த மாதம் 30-ந் தேதிக்குள் சங்கத்தின் விதிமுறைகள்படி பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.
இதில் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேருக்கும் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கவில்லை.
தள்ளிவைப்பு:
இதனால் பொதுக்குழு தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது. நடிகர் சங்க கட்டிட ஒப்பந்த முடிவுகளுக்கு அதிருப்தியாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க கட்டிடம் முன்பு அவர்கள் முற்றுகையிலும் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதிருப்தி கோஷ்டி சார்பிலும் கட்டிட ஒப்பந்தத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க செயற்குழுவில், முறைகேடு புகார் அடிப்படையில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர அவர்கள் தயாராகி வருகிறார்கள். நடிகர் சங்க பொதுக்குழுவில் தாங்கள் பங்கேற்பதை தடுப்பதற்காகவே திட்டமிட்டு நீக்கி இருப்பதாக முன்னாள் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
கட்டிட நிதி:
இதுபோன்ற பிரச்சினைகள் பொதுக்குழு தள்ளிப்போவதற்கு காரணங்களாக இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டும் பணிகளில் புதிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நட்சத்திர கிரிக்கெட் நடத்தி பணம் வசூலித்தார்கள். அடுத்து விஷால், கார்த்தி ஆகியோர் ஒரு படத்தில் நடித்து அதில் கிடைக்கும் சம்பள தொகை முழுவதையும் கட்டிட நிதியில் சேர்க்க உள்ளனர். இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டிட பணிகளை தொடங்கும் முயற்சியில் புதிய நிர்வாகிகள் தீவிரமாக இருக்கிறார்கள்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments