சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை தெரிவித்தது. அவரது உடல் சென்னை ராயபேட்டை அரசு பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் எப்படி இறந்தார் என்று சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
"ராம்குமார், விசாரணை கைதி எண் 2ல் டிஸ்பென்சரி பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் வெங்கடேசன், இளங்கோ ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர். ராம்குமார், ஏற்கனவே தற்கொலை முயன்றதால் அவருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் தண்ணீர் குடிப்பதாக சென்ற ராம்குமார், அங்குள்ள சுவிட்ச்பாக்ஸை வாயால் கடித்து உடைத்து அதில் உள்ள மின்கம்பியை கடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியவுடன் அலறியுள்ளார். இதைக்கேட்டு சக கைதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சமயத்தில் சிறைக்காவலர் பேச்சிமுத்து அங்கு வந்துள்ளார். ராம்குமாரை மின்சாரம் தாக்கியதையறிந்த அவர், கையில் இருந்த லத்தியால் அவரை தாக்கினார். இதன்பிறகு அவர் கீழே விழுந்துள்ளார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக வாக்கி டாக்கியில் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிறை மருத்துவமனை டாக்டர் நவீன், ராம்குமாரை பரிசோதித்து அவருக்கு முதலுதவியை அளித்தார்.
இதையடுத்து அங்கிருந்து சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது அவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். ராயபேட்டை அரசு மருத்துவமனை டாக்டர், சையது அப்துல்காதர், ராம்குமாரை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த டிஸ்பென்சரி பிளாக்கில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் கடந்த சில தினங்களாக பழுதடைந்து காணப்பட்டுள்ளது. அதை சரி செய்ய சிறையில் உள்ள எலெக்ட்ரீசனிடம் சொல்லியும் அவர் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 அடி உயரத்தில் உள்ள அந்த சுவிட்ச் பாக்ஸ் பழுதடைந்து இருந்ததால் அதை எளிதில் ராம்குமார் உடைத்துள்ளார். மேலும் அந்த பிளாக்கில் உள்ள சி.சி.டி.வி கேமராவும் பழுதடைந்துள்ளதாம். இதனால் ராம்குமார், தற்கொலை நிகழ்வு அதில் பதிவாகவில்லை" என்றனர்.
இன்று காலை சிறைக்கு சென்று ஆய்வு நடத்திய மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி, இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் அமைதியாக இருந்துள்ளனர். அடுத்து சிறைக்காவலர் பேச்சிமுத்து, மற்றும் விசாரணை கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சில தகவல்களை மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி குறிப்பு எடுத்துள்ளார். இது சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி கொடுக்கும் அறிக்கையில் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலையில் ராம்குமாருடன் தங்கிய விசாரணை கைதிகளிடம் நடத்திய விசாரணையிலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள், ராம்குமார், கடந்த இருதினங்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். மனஇறுக்கத்தில் இருந்த அவர், நேற்று காலை மட்டுமே சாப்பிடச் சென்றார். மதியம் சாப்பிடச் செல்லவில்லை. மாலை 4 மணியளவில் வெளியே சென்ற அவர் இந்த முடிவை எடுத்துவிட்டார். மின்சாரம் அவர் மீது பாய்ந்ததால் அருகில் எங்களால் செல்ல முடியவில்லை. மெயின் சுவிட்சை ஆப் செய்ய சில கைதிகள் ஓடினார்கள். அதற்குள் சிறைக்காவலர்கள் வந்து ராம்குமாரை காப்பாற்ற முயற்சித்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு சிறைக்காவலர் சொன்ன தகவல் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
'சார்... ராம்குமாரை காப்பாற்றுங்கள் என்று நாங்கள் சத்தம் போட்டோம். அப்போது அவர், என்னையும் அவனுடன் சேர்ந்து சாகச்சொல்கிறாயா' என்றார். இதனால் அனைவரும் அமைதியாகி விட்டோம்" என்றனர்.
இதுகுறித்து சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை புழல் சிறையில் 6 ஹை அலர்ட் பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொரு பிளாக்கிலும் 8 செல்கள் உள்ளன. அவற்றில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டுள்ளன. ராம்குமார், சிறைக்காவலர் அமர்ந்திருந்த பெஞ்ச்யை பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். விசாரணை நடந்து வருவதால் இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது" என்றார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments