ஜெய்ன் மத நிர்வாண சாமியாரை நேரில் சந்தித்து தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் பிரபல இசையமைப்பாளரும் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளருமான விஷால் தத்லானி.
கடந்த மாதம் ஹரியாணா சட்டமன்றத்தில் ஜெய்ன் மத குரு தருண் சாகர் நிர்வாண கோலத்தில் வந்து பிரசங்கம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரும் பிரபல இசையமைப்பாளருமான விஷால் தத்லானி இது குறித்து கடுமையான கருத்துக்களை முன்வைத்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தாம் ஜெய்ன் சாமியாரின் தீவிர பக்தர் என்றும், அவரது கோலத்தை வைத்து விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென மறைமுகமாக விஷாலை கண்டித்து டுவிட்டரில் பதிவு போட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தாம் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இனி தான் அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாகவும் விஷால் தெரிவித்தார். இந்நிலையில் இன்று ஹரியானா மாநிலம் சண்டிகரில் உள்ள தருண் சாகரின் ஆசிரமத்திற்கு வந்திருந்த விஷால் அவரை சந்தித்து தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
30 நிமிடங்கள் வரை அவரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய விஷால் தத்லானி கூறியதாவது "குருஜியை நேரில் சந்தித்து என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினேன். இச்சந்திப்பிற்கு பிறகு எங்கள் இருவருக்கிடையே வலிமையான உறவு ஏற்பட்டுவிட்டது. குருஜி தொடர்பாக நான் கூறிய கருத்துக்கு நேரடியாக அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்பதற்காகவே இங்கு வந்தேன். தற்போது என்னுடைய கண்கள் திறக்கப்பட்டுவிட்டது. நான் இன்று நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜெய்ன் மதத்தினரை புண்படுத்தியதற்காக விஷால் மீது ஹரியானா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் ஆஜராக வேண்டுமென அம்பாலா நீதிமன்றம் விஷாலுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Write comments