உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை நேற்று தேமுதிக நடத்தியது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம், என்று வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்றும், அப்படி போட்டியிட்டால் செலவுக்கான பணமும் இல்லை, என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவர்களது கருத்துக்களை ஏற்க மறுத்த விஜயகாந்த், ஆவேசத்துடன், ”போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது பற்றி நீங்கள் கூற வேண்டாம். தேர்தலில் போட்டியிடுவோம். நான் யாரை கையை காட்டுகிறேனோ அவர் வேட்பாளர். தனித்து போட்டியா, கூட்டணியா என்பது பற்றி விரைவில் முடிவை அறிவிப்பேன்” என்று கூறினாராம்.
ஏற்கனவே, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பல தேமுதிகவினர் தங்களது சொத்துக்களை இழந்ததாகவும், தற்போது கடனாளியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். உள்ளாட்சி தேர்தலில் தங்களை போட்டியிட வைத்துவிடுவார்களோ, என்று எண்ணி, பல தொண்டர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.
இந்த நிலையில், தங்களது கருத்துக்கு மரியாதை அளிக்காத கட்சியில் இனி இருக்க மாட்டோம், என்று கூறி, இரண்டு மாவட்ட செயலாளர்கள், திமுக-வில் இணைவதற்கு முடிவு செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து சில முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் தேமுதிக-வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Write comments