சென்னை: ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மென்பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.40 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நிகழ்ந்த இந்த படுகொலை சம்பவம், தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த படுகொலை வழக்கு தொடர்பாக, ஜூலை 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (24) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அப்போது, ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்றதாக போலீசார் கூறினர்.
உடனடியாக ராம்குமாரை போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின், பலத்த பாதுகாப்புடன் ராம்குமார் சென்னைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டார். எழும்பூர் பெருநகர மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர் படுத்தப்பட்ட ராம்குமாரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். மேலும், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின், ஜூலை 5-ம் தேதி மாலை 4 மணி அளவில் ராம்குமார், ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார், மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக புழல் சிறைத்துறையினர் தெரிவித்து உள்ளனர். ஆனால் ராம்குமாரின் தந்தை பரமசிவன் நம்மிடம் பேசுகையில், ‘‘என் மகனுக்கும் இந்த கொலைக்கு எந்த தொடர்பும் இல்லை. சிறையில் அவனை சந்தித்த ஒவ்வொரு நாளும் என்னிடம், ‘அப்பா... நான் இந்த கொலையை செய்யலை. ஆனால், ஏதோ சதியால் என்னை சிக்க வைச்சிருக்காங்க. விசாரணையில் உண்மை தெரியவரும். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்க. உண்மை சீக்கிரம் வெளியே தெரிய வரும்’னு சொல்லிக்கிட்டே இருந்தான்.
ஆனால், இப்போது என் மகனை அரசும் காவல்துறையும் சேர்ந்து கொலை செஞ்சு இருக்காங்க. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்காங்க என்பது எனக்கு தெரியாது. என் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல. அவனைக் கடைசியாக சந்தித்தபோது கூட, ‘அப்பா நீங்க தைரியமா இருங்க. நான் நிரபராதியா வெளியே வருவேன். கவலைப்படாதீங்க. அம்மாவிடமும் தங்கச்சிகளிடமும் இதை சொல்லுங்க’னு சொன்னான். இதில் சதி இருக்கிறது. இதை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசே இப்படி ஒரு செயலை செஞ்சிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. என் மகனின் மரணத்தில் நடந்த உண்மையை அரசு வெளிப்படுத்தியே தீர வேண்டும். அதுவரை நான் ஓயமாட்டேன்’’ என்றார்.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார், மர்மமான முறையில் இறந்திருப்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மு.க.ஸ்டாலின்...
தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ''ராம்குமார் சிறையில் மின்கம்பியைக் கடித்து, தற்கொலை செய்து கொண்டார் என சிறைத் துறையினர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியும், மர்மமும் நிறைந்ததாக உள்ளது. அவரது பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்.
இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டபோதே போலீஸ் அலட்சியம் காட்டியது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே ராம்குமாரை போலீஸ் கைது செய்தது. கைது செய்தபோதே கழுத்தை அறுத்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் கூறியது. தொடக்கத்தில் இருந்தே சுவாதி கொலை வழக்கின் உண்மைநிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன.
மிகவும் பாதுகாப்புமிக்க சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஏற்கக் கூடியதாகவும், நம்பும்படியும் இல்லை. ராம்குமாரின் பாதுகாப்பைக் கூட சிறைத்துறை உறுதி செய்ய முடியாதது வெட்கக்கேடானது. சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்ட சில நாட்களிலேயே ராம்குமார் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. ராம்குமார் மரணம் பற்றி சந்தேகம் எழுந்து இருப்பதால், இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி உள்ளார்.
திருமாவளவன்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ''சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், உயிரிழப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ராம்குமார் மரணத்தில் வேறு பின்னணி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராம்குமாரின் மரணத்தில் உள்ள சந்தேகத்தை போக்கும் கடமை அரசுக்கு உள்ளது. சுவாதி கொலையில், போலீசாரின் நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது.
ராம்குமாரை புழல் சிறையில் அவரது பெற்றோரும், வழக்கறிஞர்களும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவர்களிடம், சுவாதியை தான் கொலை செய்யவில்லை என்று ராம்குமார் கூறியிருக்கிறார். அதனால், ராம்குமார் மரணம் உண்மையில் தற்கொலை தானா? வேறு ஏதேனும் நடந்து உள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். ராம்குமார் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு. அதனால், ராம்குமாரின் உடலை உடனடியாக அடக்கம் செய்யாமல் உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ''ராம்குமார் தற்கொலை செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கைது நடவடிக்கையின்போதே அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக செய்தி வந்தது. ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறபோது எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும், சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது, உரிய பாதுகாப்பு அளிக்கவில்லையா போன்ற கேள்விகள் எழுகின்றன. எனவே, ராம்குமார் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நியாயமான முறையில் உயர்நிலை நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி உள்ளார்.
ஜி.கே.வாசன்...
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ''ராம்குமாரை கைது செய்யச் சென்றபோதே அவர் தற்கொலைக்கு முயன்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியையும், பெருத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததால், அது குறித்த உண்மை நிலையை அவரது பெற்றோருக்கும், பொது மக்களுக்கும் தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்
கிருஷ்ணசாமி...
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ''ராம்குமாரின் மரணம் நம்பக் கூடியதாக இல்லை. இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த வேண்டும். சம்பவ இடத்தை அனைத்துக் கட்சிக் குழு அமைத்து பார்வையிட அனுமதிக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments