சென்னை பூந்தமல்லி பகுதியில் பூட்டியிருந்த நீதிமன்ற பதிவாளர் வீட்டில் 80 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை அருகே பூந்தமல்லியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி (85) வசித்து வருகிறார். இவர் தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 25ஆம் தேதி, தன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சோளீங்கரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புதன்கிழமை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பீரோக்களில் இருந்த 80 பவுன் நகை, ரூ.15,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பூந்தமல்லி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்று கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சைதாப்பேட்டையில் கூடுதல் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 200 சவரன் நகைகள் திருட்டுப்போனது. இதுவரை இந்தச் சம்பவத்தை நிகழ்த்திய கொள்ளையர்களை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments