Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 9, 2016

‘இது பணமல்ல காகிதம்’-சர்வாதிகாரமா?


இந்தியர்கள் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். உறங்கி எழுந்தால் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத வெறும் காகிதமாகிவிடும் என்று. யாருமே எதிர்பாராத தருணத்தில் நேற்று(8.11.2016) இரவு எட்டு மணிக்கு கனகம்பீரமாக உறுதியான குரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றத்தொடங்கினார். அவர் உரையைக் கேட்கத் தொடங்கியதும் இந்தியாவில் மீண்டும் அவரச பிரகடன நிலையா என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சரி மோடி அப்படி என்னதான் உரையாற்றினார் என்பதை பார்த்துவிடலாம்.
“சகோதர சகோதரிகளே.... இன்று இரவு பனிரெண்டு முதல் உங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. உங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளிலோ அல்லது அஞ்சல் நிலையங்களிலோ உங்கள் கணக்கில் அவற்றை செலுத்தி விடலாம். ஒப்படைக்கும் தொகைக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. வங்கிகளில் பணத்தை ஒப்படைத்து மாற்றம் செய்துகொள்ள உங்களுக்கு ஐம்பது நாள் அவகாசம் உள்ளது. உங்கள் பணம் உங்களுடையதுதான். இந்த பரிவர்த்தனையை செய்ய உரிய அடையாள அட்டை காண்பிக்க வேண்டும், உதாரணமாக , ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை காண்பித்து பணமாற்றம் செய்து கொள்ளலாம். டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியில் மனு ஒன்றை அளித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மார்ச் 31, 2017 வரை உள்ளது. இதற்கும் அடையாள அட்டை அவசியம். நாடு முழுதும் நாளை (நவ.9) வங்கிகள் செயல்படாது. ஏடிஎம்.கள் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் செயல்படாது. சில அவர தேவைகள் கருதி, பெட்ரோல் நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், சர்வதேச விமான நிலையங்கள், ரயில் டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை பயன்படுத்தலாம். வங்கிகளில் பணத்தை செலுத்திவிட்டு நாலாயிரம் ரூபாய் மாற்றாக பெறலாம். கூடுதல் தேவையென்றால் காசோலை, ஆன்லைன் மூலம் பணத்தை பரிவர்த்னை செய்து கொள்ளலாம்.
அதே போல் வரும் 18ம் தேதி வரை ஏடிஎம்மில் ரூ.2000 மட்டுமே எடுக்க அனுமதி. 19ம் தேமி முதல் ரூ.4,000 ஆக அதிகரிக்கப்படும். அதன் பின்னர் மேலும் அதிகரிக்கப்பட்டு வங்கி ஏடிஎம்-களிலிருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்க அனுமதி உண்டு, வாரத்திற்கு ரூ.20,000 வரை மட்டுமே வங்கி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்க முடியும். இண்டெர் நெட் பேங்கிங், காசோலை, டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக போராட இது ஒரு வாய்ப்பு. இதுவரை பல்வேறு வழிமுறைகளில் ஊழல்வாதிகளிடமிருந்து ரூ.1,25,000 கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம். கருப்புப் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள்தான் கருப்புப் பணத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் கள்ள நோட்டுகளை அடித்து விநியோகித்து வருகின்றனர். ஊழல், கருப்புப் பணம், பயங்கரவாதம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியின் குறுக்கே நிற்கிறது. இந்த நடவடிக்கையால் நாட்டு மக்களுக்கு சில சிரமங்கள் ஏற்படலாம். நாட்டின் நலனை மனதில் கொண்டு மக்கள் இந்த தியாகத்தை செய்துதான் தீரவேண்டும்” என்று மோடி உரையை முடித்துவிட்டார். உறைந்து போனார்கள் மக்கள். அவரது உரையைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் படேல் மற்றும் மத்திய நிதிதுறை செயலர் சக்தி கந்ததாஸ் பேசினார்கள். “போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிப்பை அதிகரித்து உள்ளோம், போதிய எண்ணிக்கையில் நோட்டுக்கள் தயாராக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றன. கள்ள நோட்டு கருப்பு நோட்டு பணம் அதிகரித்துள்ளதை தடுக்க இந்த நடவடிக்கையானது அவசியம். புதிய நோட்டுக்களை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே வங்கிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 10ம் தேதி முதல் புதுபாதுகாப்பு அம்சங்களுடன் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளிவரும். கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாதபடி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நோட்டுக்கள் உள்ளன. 500 ரூபாய் நோட்டில் ஒரு புறம் காந்தி உருவமும் மறுபுறம் செங்கோட்டையும் இடம் பெற்றுள்ளது. அதே போல் புதிதாக அறிமுகமாகும் 2000 ரூபாய் நோட்டில் நம் நாட்டின் விஞ்ஞான சாதனையை பறைசாற்றும் வகையில் மங்கள்யான் படம் பொறிக்கப்பட்டுள்ளது” என்றார்கள். இது குறித்து பேசியுள்ள இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, “மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு துணிச்சல் மிகுந்தது. பாராட்டத் தக்கது” என்று கூறியுள்ளார்.
ஒரு கணம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த திடீர் அறிவிப்பால் இந்தியாவே அல்லோலகல்லோப்பட்டு போனது என்றுதான் கூற வேண்டும். மோடியின் உரையை, அதில் பொதிந்துள்ள கருத்துகளை புரிந்துகொள்ளவே சாதாரண பொது மக்களுக்கு எத்தனை நாள் அவகாசம் தேவைப்படும் என்று தெரியவில்லை. சாதாரண மனிதனைப் பொறுத்தவரை இது அவன் தலையில் இடி விழுந்ததற்கு சமம்தான். அவனைப் பொறுத்தவரை இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது. அவ்வளவு தான் . அடுத்தநாள் காலையில் அடுப்பில் உலை வைக்க அரசிவாங்க அவன் கையில் இருக்கும் 500 ரூபாய் பயன்பாடாது. அந்த நோட்டு வெற்றுக் காகிதம். எனில் அவனும் அவன் குடும்பமும் எப்படி உணவு உண்ணும்? மடியில் பணத்தை கட்டிக்கொண்டு வெளியூருக்கு கொள்முதல் செய்யச் சென்ற வியாபாரியின் நிலை என்ன? அடுத்த சில நாட்களில் திருமணம் நடத்தவிருக்கும் குடும்பத்தின் கதி என்ன? எந்த முன் அறிவுப்பும் இல்லாமல் இப்படி நிதிநெருக்கடியை ஏற்படுத்துவது சர்வாதிகாரம் இல்லையா? என்று கேள்விகள் மனதில் ஓயாத அலைபோல் எழுந்துகொண்டே இருக்கின்றன. மோடியின் அறிவிப்பு நன்மையோ தீமையோ, ஆனால் அதை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இந்நிலையில் இது குறித்து பொருளாதார வல்லுனர் சோமவள்ளியப்பன் என்ன கூறுகின்றார் என்பதை அறிந்து கொள்வது நல்லது.. “இது துரதிஷ்டமான நிலைதான். சதாரணமான சூழ்நிலையில் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்னையின் தீவிரம் தெரியாது. ஆனால், சுபநிகழ்ச்சி நடத்த வேண்டிய நிலையில் உள்ளவர்கள், பயணத்தில் உள்ளவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், வயதானவர்கள் இவர்களுக்கு பணம்தான் உயிர் மூச்சைப் போன்றது. இவர்களின் நிலை துயரமானதுதான். இந்தியா போன்ற தேசத்தில் தேர்தல் நடத்தவே மிகப்பெரிய திட்டமிடல் தேவைப்படுகிறது. மாதக்கணக்கில் கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனிடமும் குறைந்தது ஒரு ஐநூறு ரூபாயாவது இருக்கும். இந்த ஒட்டு மொத்த பணமும் 50 நாட்களுக்குள் அரசிடம் சென்றடைய வேண்டும். அரசு நடத்த முடிவு செய்திருப்பது மிகப்பெரிய ஆப்ரேஷன். இன்னும் பதினைந்து நாட்களுக்கு இந்திய தேசம் ஒரு சவாலான சூழ்நிலையை கடந்து செல்ல வேண்டும். இது புயலைக் கடப்பது போன்றதுதான். இப்போது மிக அவசியமானது தகவல் தொடர்பு. மோடி அறிவித்தும், பணத்தை மாற்ற உள்ள வழிமுறைகளும் மக்களுக்கு சரியாக சென்றடைய வேண்டும். நாளையே அனைவரும் வங்கியை முற்றுகையிட வேண்டிய அவசியம் இல்லை. பணத்தின் அதி முக்கிய தேவை உள்ளவர்களுக்கு முதலில் வழிவிட வேண்டும். இந்தச் சூழலில் நமக்கு நாமே செய்து கொள்ளும் பரஸ்பர உதவி இது. எடிஎம் கார்ட் , கிரிடிட் கார்ட் வைத்திருப்பர்கள், செக் வைத்திருப்பவர்கள், ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யக் கூடிய வசதியுள்ளளவர்கள் அவரச பணத் தேவை உள்ளவர்களுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டும். மற்றவர்களுக்கு தங்கள் கையில் உள்ள பணத்தை மாற்ற போதுமான கால அவகாசம் உள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்பு நீண்டாகலத்திற்கு இந்தியாவிற்கு பயனளிக்கும் விஷயம் என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை இந்த நடவடிக்கை நிர்மூலமாக்கும்” என்றார் அவர்.
மோடியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா அவர்கள், “மோடியின் இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நம் நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்துபவர்கள் அல்ல. சதாரணமாக பொதுமக்கள் வீடுகளில் ஆயிரங்களில் லட்சங்களில் பணத்தை கையில் வைத்திருப்பார்கள். அவர்கள் வங்கிகளில் பணத்தை செலுத்து என்றால் அதற்கு முன் அறிப்பு அவசியம். தெளிவான வழிகாட்டுதலும் வேண்டும். மக்கள் வங்கியில் செலுத்தும் பணத்திற்கு உத்தரவாதம் வேண்டும். மேலும் அரசு இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை. ஏற்கெனவே 85 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் இருக்கிறது. அதை மீட்போம். அதை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் பெயரிலும் டெபாசிட் செய்வோம் என்று சொன்னவர்கள். அந்த பேச்சு காற்றோடு போய்விட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன். கள்ளப்பணத்தை ஒழிக்கிறேன் பேர்வழி இப்போது இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் விளைவுகளை இப்போது கணிக்க முடியாது. இந்தத் திட்டத்தின் மூலம் சதாரண மக்கள் பாதிக்கப்படாமல் கருப்பு பணமும் கள்ளப்பணமும் ஒழியுமானால் அதை நாம் வரவேற்கலாம். தீவிராவதிகளிடம் பெருவாரியான கள்ளப்பணம் இருப்பதாக ஏதோ ஒரு ரகசிய செய்தி மத்திய அரசிற்கு கிடைத்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த அதிரடியான நடவடிக்கையில் இருக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ” என்றார்.
காவிரி மீட்புக் குழுவின் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் பேசும் போது, “இந்த நடவடிக்கையை நான் திசை திருப்பும் நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன். வெளிநாடுகளில் லட்சக்கணக்கான கோடிகள் கருப்பு பணமாக இருக்கிறது. அதை மீட்க முடியவில்லை. நிதியமைச்சர் அருண்ஜெட்லி கருப்பு பண முதலைகளை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார். திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்த நடவடிக்கையை அரசரப் பிரகடன நிலையின் முன்னோட்டமாக நான் ஐயப்படுகிறேன். அத்வானி ஏற்கெனவே அவரச பிரகடன நிலை ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது என்று சொல்லிவிட்டார். பாஜக ஆட்சியனர் என்டிடிவிக்கு தடை விதித்தார்கள். போபால் சிறையிலிருந்து தப்பிய எட்டு பேரை சுட்டுக்கொன்றார்கள். பொது சிவில் சட்டம் கொண்டு வர திட்டமிடுகிறார்கள். இந்துத்துவா அரசை நிறுவ தீவிரமாக இருக்கிறார்கள். இவர்களின் செயல்களுக்கு மாற்றுக் கருத்துகளை முடக்க வேண்டும். முற்போக்கு வேடம் போட்டு, எல்லாம் மக்களின் நலனுக்காக அதிரடியாக செயல்படுவதாக காட்டிக்கொண்டு, அவர்களுடைய அடிப்படை கோட்பாடுகளை நிறைவேற்ற தயாராகிவருகிறார்கள். இந்திரா காந்தி அவர்கள் எமர்ஜென்ஸியை கொண்டு வரும் முன் 20 அம்ச திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஹிட்லர் சர்வாதிகாரத்தை கையில் எடுக்கும் முன்னால் மே தினத்தை கொண்டாடினார். தொழிலாளர் இல்லாமல் ஜெர்மனி இல்லை என்று புகழாரம் சூட்டினார். மறுநாளே தொழிற்சங்கங்களை தடை செய்தார். சர்வாதிகாரிகளின் முன் யுக்தி இப்படித்தான் இருந்திருக்கிறது” என்றார்.
பொருளாதார வல்லுனர் ஹரிகரன் அவர்கள், “500 , 1000 நோட்டுகள் செல்லது என்று திடீரென்று அறிவித்தால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் பெரிய பணமுதலைகளின் கறுப்பு பணம் இனி செல்லாக் காயிதமாகிவிடும். ஒருவர் ஐநூறு கோடி கருப்பு பணமாக இந்தியாவில் பதுக்கி வைத்திருக்கிறார் என்றால் அதற்கு இப்போது எந்த மதிப்பு இல்லை. காரணம் அந்த பணத்தை அவரால் வங்கியில் ஒப்படைக்க முடியாது. அப்படியே ஒப்படைத்தாலும் அந்த பணத்திற்கான சோர்ஸ் என்ன என்ற கேள்வி எழும்.” என்றார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள். “மிகமிக வரவேற்க கூடிய அறிவிப்பு இது. நிதிநிலையில் எதை எப்படி கட்டுப்படுத்த போகிறோம் என்ற கால கட்டத்தில் கணக்கில் அடங்கா பணம் அரசின் கணக்கிற்கு வராமல் நடமாடிக்கொண்டிருந்தது. தேர்தலில் இது பெரிய அளவில் ஊழலை ஏற்படுத்துகிறது. பணக்காரர்கள் பணக்காராகிக்கொண்டே போனார்கள். ஏழைகள் உழைத்துத் தேய்ந்தார்கள். ஆக எல்லாவற்றுக்கும் ஒற்றைத் தீர்வாக இந்த அறிவிப்பு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த மட்டுமல்ல. நாட்டில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியமானது. ஏழைகளில் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது. மக்கள் இதை வரவேற்க வேண்டும். இடையில் சிறு சிறு தடங்கள் வரலாம். ஐநூறு ரூபாய் கையில் இருந்தும் டீக்குடிக்க முடியவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. உடல் நிலை சரியில்லை என்றால் மருத்து குடிக்கிறோம். மருத்து கசக்கிறது. ஊசி போட்டுக் கொள்கிறோம். அது வலிக்கிறது. இல்லையா? அப்படித்தான் இதுவும். நாட்டின் நலன் கருதி சில நாட்களுக்கு இந்த சிரமத்தை மக்கள் பொருத்தருள வேண்டும். நம் வருங்காலத்திற்காக இந்த புரட்சியை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்” என்றார். மேலும், மோடியின் அதிரடி அறிவிப்பை நடிகர் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதோடு, மோடியின் இந்த நடவடிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன். இந்தியா இன்று புதிதாக பிறந்தது என்று தன் ட்டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி இரவு நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இந்தியாவில் இன்னும் பாதிபேருக்கு இந்த தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விடியும் இன்றய தினம் இந்தியாவின் வரலாற்றால் மறுதலிக்கப்பட முடியாத ஒரு சிக்கலும் குழப்பமும் மிகுந்த நாள் என்பதை நாம் மறுக்க முடியாது. ஒருவேளை பொது மக்கள் நிலைமையை சரியாக புரிந்து கொண்டால், அரசு திட்டமிட்டபடி இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சில நல்ல காரியங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
- வேட்டை பெருமாள்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic