என்.டி.டிவி-க்கு ஒரு நாள் தடை விதிப்பதாக அரசு நினைத்தபோது, இத்தனை மக்களின் கோபத்துக்கும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் பழிச் செய்திகளுக்கும் ஆளாவோம் என கற்பனைகூட செய்திருக்கவில்லை. நவம்பர் 3, வியாழனன்று, தடையாணை விதிக்கப்பட்டது. ஆனால் சனிக்கிழமை அன்றே, தாம் தோற்றுவிட்டதை அரசு உணரத் தொடங்கிவிட்டது.
அரசின் உயர் அதிகாரி ஒருவர் என்.டி.டிவி-யின் மூத்த ஊடகவியலாளரைச் சந்தித்து, தகவல் ஒளிபரப்பு அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுடன் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்ததாக ஒரு தரப்புச் செய்தி கூறுகிறது. என்.டி.டிவி, தாங்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்துக்குச் செல்ல முடிவு செய்துவிட்டதாகவும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும் தெளிவாக மறுத்துவிட்டது. ஆனால் உயர் அதிகாரி, எதிர்காலத்தில் கவனமாக நடந்துகொள்வதாக வாக்களித்தால் தடை விலக்கப்படலாம் என குறிப்பளித்திருக்கிறார். என்.டி.டிவி-யின் செய்தி ஆசிரியர் மிக உறுதியாக, அமைச்சரை சந்தித்து சமரசம் செய்ய விருப்பமில்லை என தெரிவித்ததில் உயர் அதிகாரிக்கு ஆச்சரியம்தான் என ஒரு தரப்புச் செய்தி தெரிவிக்கிறது.
ஞாயிறு ஆகும்போது, அரசு பதட்டத்தில் இருந்தது. மொத்த ஊடகமும் என்.டி.டிவி-க்குப் பின் நிற்கிறது. வலதுசாரி வலைதளங்கள் உட்பட, நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் என்.டி.டிவி-க்கு பலத்த பொதுமக்கள் அனுதாபம் இருப்பது தெரிகிறது. என்.டி.டிவி இந்தியாவின் முக்கிய தொகுப்பாளர் ரவிஷ் குமார், தன் போராட்டத்தைப் பதிவுசெய்ய, மைம் கலைஞர்களை பயன்படுத்தியது மிகப் பரவலாகியது. மகன் தொலைந்துபோனதற்காக, அமைதியான முறையில் போராட அமர்ந்த மத்திய வயதுப் பெண் ஒருவரை டில்லி போலீசார் இழுத்துச்செல்லும் படங்கள் தேசிய சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இப்பிரச்னையை முடித்துக்கொள்ள வேண்டும் என அரசு மீண்டும் என்.டி.டிவி செய்தி ஆசிரியர்களையும் நிருபர்களையும் சந்திக்க ஆள் அனுப்பியது. பிரனாய் ராய், அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்திப்பதாக முடிவு செய்தபிறகு, அரசுத் தரப்பில் பெரும் நிம்மதி ஏற்பட்டது. இச்சமயத்தில், என்.டி.டிவி முக்கிய வழக்குரைஞர்களை பணியமர்த்தி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அரசுக்கும் தெரியும்.
என்.டி.டிவி-யின் பக்கம், தாங்கள் மட்டுமே இவ்வகையில் தனிப்படுத்தப்பட்டிருக்கிறோம் எனும் பலமான விவாதமும் தங்கள்மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை சட்டரீதியாக செல்லாது என வலிமையாக வழக்கும் இருந்தது என வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
திங்களன்று, என்.டி.டிவி தன் இந்தி சேனலுக்கு தடை விதித்திருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக, ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு அறிவித்தது. அதேநாள் மாலை, பிரனாய் ராய் மற்றும் மூத்த பத்திரிகையாசிரியர்கள் குழு ஒன்று, வெங்கய்யா நாயுடுவை சந்திக்க ஒத்துக்கொண்டது. இந்தச் சந்திப்புக்கு சில மணித்துளிகள்முன்பாக வெங்கய்யா நாயுடு ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த ஊடகச் சந்திப்பு, ‘தடை என ஒன்று இல்லை. நாங்கள் ஒரு அறிவுரை அனுப்பியிருக்கிறோம், அதை சேனல் பின்தொடர்கிறதா என்று பார்ப்போம்’ என்ற வெங்கய்யா நாயுடுவின் சுவாரசியமான அறிக்கையோடு முடிந்தது.
சந்திப்பின்போது, என்.டி.டிவி கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடு, அமைச்சகத்துக்கு ஆச்சரியமளிப்பதாக இருந்திருக்கிறது. சேனல் சமரச எண்ணத்துடன் இருக்கும் என அமைச்சகம் நினைத்திருந்தது. மாறாக, என்.டி.டிவி எந்தத் தவறும் செய்திருக்கவில்லை. அதனால் தடையை மறுபரிசீலனை செய்யச்சொல்லி கோரிக்கை வைக்கமுடியாது என்பதில் பிரானாய் ராய் மிக உறுதியாக இருந்திருக்கிறார். அமைச்சர், தவறான புரிதல் நேர்ந்ததை ஏற்றுக்கொண்டு, தகவல்கள் மீண்டும் ஆராயப்படும் என குறிப்பு கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
தடை ஆணையை நிறுத்திவைக்க வேண்டுமென என்.டி.டிவி அதிகாரபூர்வமான விளக்கம் ஒன்று அளிக்கவேண்டுமென அமைச்சகம் கோரிக்கை வைத்தது. பலமுறை தன் வழக்குரைஞர்களை கலந்து ஆலோசித்த என்.டி.டிவி, அமைச்சரிடமிருந்து தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என கடிதம் வந்தால், தாங்கள் கடிதமளிக்கத் தயார் எனத் தெரிவித்தார்கள். அன்று, முக்கிய அதிகாரிகள் அனைவரும் சென்றுவிட்ட காரணத்தால் மறுநாள், கடிதம் வழங்கப்படும் என அமைச்சகம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கேயே, அப்போதே தடையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், என்.டி.டிவி சார்பாக எந்த விளக்கமும் கொடுக்க முடியாது என்பதில் என்.டி.டிவி குழு உறுதியாக இருந்திருக்கிறது. அந்த இடத்தில்தான் அரசு அடிபணிந்திருக்கிறது.
என்.டி.டிவி-யின் விளக்கத்தில், வெங்கய்யா நாயுடு குறிப்பு ஒன்று எழுதி கையொப்பமிட்டிருக்கிறார். இருப்பினும், அரசு சார்பாக அதிகாரபூர்வமான கடிதம் வரும்வரையில் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை என்.டி.டிவி. அமைச்சகத்தில் அதிகாரிகள், ஒரு மணி நேரத்துக்குள் இவை அனைத்தையும் செய்து முடித்திருக்கிறார்கள்.
மிகத் தெளிவாக அரசு தோற்றிருப்பது, என்.டி.டிவி-க்கு மட்டுமல்ல; ஊடகச் சுதந்திரத்துக்கே மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. தோல்விப் பழியிலிருந்து தப்பவேண்டியதற்காக, வெங்கய்யா நாயுடு, ட்விட்டரில், ‘அரசின் தாராளவாத ஜனநாயக பண்பாட்டின்’ அடிப்படையில் தடையை நிறுத்திவைப்பதாக எழுதியிருக்கிறார். என்.டி.டிவி-யின் வெற்றியை சமூக வலைதளம் குதூகலித்துக் கொண்டாடியவேளையில், வலதுசாரி அமைப்புகள் வெங்கய்யா நாயுடு முதுகெலும்பற்றவர் என வசைபாடிக் கொண்டிருந்தது.
சில மாதங்களுக்குமுன்பு, என்.டி.டிவி மீது இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். ஊடக அமைப்புகள் அரசோடு பிரச்னை வேண்டாம் என ஒதுங்கி நின்றிருக்கும். வலதுசாரி அமைப்புகள், சமூக வலைதளத்தில், என்.டி.டிவி-க்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கும். ஆனால் இன்று அனைத்தும் மாறியிருக்கிறது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளும் போர் முரசுகளும் தேசியவாதமும் உணர்ச்சிபூர்வமாக மக்களை அணுகுவதாக இருக்கலாம். ஆனால் வேலை வாய்ப்புகள் இல்லாமலிருந்து, உணவு விலை கூடிக்கொண்டே போகும்போது, தொழிற்சாலைகள் காண்டிராக்ட்டுகள் போட்டுக்கொண்டேயிருந்து, வணிகப் பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்தால், அரசுக்குப் பின் மக்களை பேரணி நடத்தச்செய்வது கடினமான வேலையாகிவிடும்.
காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதை ஊடகவியலாளர்களால் கணிக்க முடியும். என்.டி.டிவி-க்கு ஆதரவாக முக்கிய ஊடக நிறுவனங்களும், மூத்த பத்திரிகையாளர்களும் வருவதற்கு இந்த கணிப்புத் திறனே காரணம். ஊடகச் சுதந்திரத்தின் மீது இருக்கும் அர்ப்பணிப்பு என்பதைவிட, அரசியல் அலை திசை திரும்புகிறது எனும் உணர்வுதான் அது. ஐந்து வருடங்களுக்குமுன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதியவர் ஒருவரும், ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியும் டில்லியின் ஜந்தர்மந்தரில், லோக்பால் வேண்டும் என தர்ணா செய்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நடந்ததும் இதேதான். அதன் மீதம் வரலாறு!
கட்டுரையாளர் : அமித் சென்
தமிழில் -ஸ்னேகா
https://angrylok.wordpress.com/2016/11/08/why-the-ban-was-put-on-hold/
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
No comments:
Write comments