அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் மாதம் 22-ந்தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவினரும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரும் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இடையிடையே சொந்த நாடு திரும்பும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே 4-வது முறையாக கடந்த வாரம் சென்னை திரும்பி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் மீண்டும் லண்டன் திரும்பி சென்றுள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே நேரத்தில், சிங்கப்பூரில் இருந்து வந்த பிசியோதெரபி பெண் நிபுணர்கள் சீமா, ஜூடி ஆகியோர் உடற்பயிற்சி மூலம் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று 43-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து அவர் எழுத பயிற்சி பெற்று வருகிறார். அவரது தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டு, ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, நேற்று அவரை இயற்கையாக சுவாசிக்க வைக்க டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதாவது, ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சையை நிறுத்தப்பட்டு, இயற்கையாகவே அவரால் சுவாசிக்க முடிகிறதா? என்று டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால், சில மணி நேரம் இயற்கையாகவே சுவாசிக்க முடிந்தது. பின்னர், மீண்டும் ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சையை தொடருவதும், பின்னர் அதை நிறுத்திவிட்டு இயற்கையாக சுவாசிக்க வைப்பதும் என மாறிமாறி டாக்டர்கள் செய்தனர். ஜெயலலிதா இயற்கையாக சுவாசிக்கும் நேரத்தை டாக்டர்கள் அதிகரித்தபோதும் அவரால் இயல்பாக மூச்சுவிட முடிந்தது. இதனால், டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். விரைவில், அவரது தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாய் அகற்றப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் குழு முடிவு செய்துள்ளது.
எனவே, அடுத்த 5 நாட்களுக்குள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எந்த நேரத்திலும் சாதாரண வார்டுக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை கேள்விப்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக நேற்று நடிகை சாரதா வந்தார். இதேபோல், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
பின்னர், மருத்துவமனைக்கு வெளியே நடிகை சாரதா நிருபர்களிடம் கூறியதாவது:-
அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வரும்போது மிகவும் வருத்தத்துடன் வந்தேன். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களை சந்திக்க முடிந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகவும் நலமுடன் இருப்பதாகவும், பயப்பட வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பல கோடி மக்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாசம், அன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மீது அதிகம் இருக்கிறது. தமிழகம் மட்டும் அல்லாது, உலகத்திற்கே ஜான்சிராணி என்றால் அது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் என அவர் கூறினார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments