தேர்தல் பிரச்சாரத்தின்போது, விதிகளை மீறிப் பேசியதாக மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவா சட்டசபைக்கு நாளை மறுநாள் 4ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பாஜக-வுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி 29ஆம் தேதியன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பிரச்சாரம் செய்தார். அப்போது மக்களிடம் பேசிய அவர், ‘பிறர் உங்களுக்கு ஆயிரமோ, மூவாயிரமோ கொடுத்தார்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் கொடுப்போம். ஐந்து வருடங்களில் இது 90,000 ரூபாயாக மாறும். ஆனால் இன்று நீங்கள் யாரிடம் பணம் வாங்கினாலும் தாமரை சின்னத்துக்குத்தான் வாக்களிக்க வேண்டும்’ என சர்ச்சையாக பேசினார். மத்திய அமைச்சர் ஒருவரே மக்களை பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடச் சொன்னது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
மனோகர் பாரிக்கரின் இந்தப் பேச்சு, தேர்தல் விதிகளை மீறியதாகக்கூறி தேர்தல் கமிஷன் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், நாளை 3ஆம் தேதி பிற்பகலுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Write comments