கடந்த வெள்ளியன்று, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும், 7 நாடுகளில் இருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார், டொனால்ட் ட்ரம்ப். அடுத்த 90 நாட்களுக்கு ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, ஈராக், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வர முடியாது. மேலும் அமெரிக்காவின் அகதிகள் திட்டத்தையும் 120 நாட்களுக்கு ரத்து செய்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
முறையான விசாவோடு அமெரிக்காவிற்குள் வந்து இறங்கியிருக்கும் பயணிகளை திருப்பி அனுப்பக் கூடாது என அமெரிக்க நீதிபதி ட்ரம்ப் ஆணையின் ஒரு பகுதிக்கு தடை விதித்திருக்கிறார். ஆனால், அமெரிக்க அகதிகளுக்கு தடை விதிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 200 வருடங்களில், அமெரிக்க அதிபர்கள் குறிப்பிட்ட குழு அகதிகளுக்கு மட்டும் பிரத்யேக தடை உத்தரவு இட்டிருக்கின்றனர்.
அப்படி தடை உத்தரவு இடப்பட்ட ஆறு தருணங்கள் :-
1. சீனர்களுக்கு தடை!
அதிபர் செஸ்டர் ஏ.ஆர்தர் - மே 6, 1882.
சீனர்களை வெளியேற்றும் சட்டத்தின் வழியே, சுரங்க வேலையில் இருந்த சீனர்களை பத்து வருடங்களுக்கு அமெரிக்காவிற்குள் வர தடை விதித்தார் செஸ்டர். அமெரிக்காவிற்குள் குடியேற்றத்தை தடை செய்த முதல் சட்டம் இதுவே. அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை உச்சத்தில் இருந்தபோது இந்த சட்டம் வந்தது. அமெரிக்காவின் தொழிலாளர்களில் சிறு பகுதியே சீனர்களாக இருந்தாலும்,வேலை வாய்ப்பின்மைக்கும், பொருளாதாரப் பிரச்னைகளுக்கும் அவர்கள் பலிகடா ஆக்கப்பட்டார்கள்.
இந்த சட்டத்தினால், ஏற்கனவே அமெரிக்காவில் இருந்த சீனர்களுக்கு குடியுரிமை தடை செய்யப்பட்டது. அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியே சென்றால், திரும்பி வருவதற்கு சான்றிதழ் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த சட்டம் 1892 ஆம் ஆண்டு ரத்தானது. ஆனால் கியரி சட்டம் எனும் பெயரில் மேலும் பத்து வருடங்களுக்கு தொடர்ந்தது. அமெரிக்காவில் இருக்கும் சீனர்களிடம் குடியிருப்பு சான்றிதழ் இல்லையென்றால் அவர்கள் நாடு கடத்தப்படுவர் எனும் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டு, மங்குசன் சட்டம் எனும் சட்டத்தின் வழியே இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சீனா, அமெரிக்காவிற்கு நட்பு நாடாக இருந்தபோது இந்த சட்டம் வந்தது.
2. இரண்டாம் உலகப் போரின் போது யூத அகதிகள்!
அதிபர் ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்
இரண்டாம் உலகப்போரின்போது பல கோடி மக்கள் வீடிழந்து அகதிகள் ஆனார்கள். அப்போது, அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட், அகதிகள் நாட்டின் பாதுகாப்பிற்கு தீவிரமான அச்சுறுத்தால் என்பதில் உறுதியாக இருந்தார். நாசி உளவாளிகள் அகதிகளுக்கு மத்தியில் பதுங்கி இருப்பார்கள் எனும் பயத்தில், ஒரு வருடத்திற்கு அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஜெர்மன் யூதர்களின் எண்ணிக்கையை 26,000 ஆக குறைத்தார். ஆனால், ஹிட்லர் காலத்தில், இந்த கணக்கில் 25% மட்டுமே நிரப்பப்பட்டது என சொல்லப்படுகிறது.
1939 ஆம் ஆண்டு, செயிண்ட் லூயிஸ் ஓசன் லைனர் எனும் கப்பலில் வந்த 937 அகதிகளை, யூதர்களாக இருப்பார்களோ என சந்தேகித்து திருப்பி அனுப்பியது அமெரிக்கா. கப்பல் ஐரோப்பாவிற்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டது. அங்கே, நடந்த படுகொலையில் பயணிகளில் பலர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
3. அராஜகவாதிகளுக்கு தடை
அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் - மார்ச் 3, 1903
1903 ஆம் ஆண்டின் அராஜகவாதிகளை வெளியேற்றும் சட்டத்தின் வழியே, அராஜகவாதிகளையும், அரசியல் தீவிரவாதிகளாக கருதப்பட்டவர்களையும் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது அமெரிக்கா. 1901ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் வில்லியம் மெக்கின்லி, அமெரிக்க அராஜகவாதியான லியோன் ஸோல்கோஸால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சட்டம் 1903 ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டம் என சொல்லப்பட்டது. மேலும் அராஜகவாதிகளோடு கூட , பிச்சைக்காரர்கள், வலிப்பு நோய் இருந்தவர்கள், பாலியல் தொழிலாளர்களை இறக்குமதி செய்பவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.தனி நபர்கள் தங்கள் அரசியல் நம்பிக்கைகளுக்காக தடை செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
4. கம்யூனிஸ்டுகளுக்கு தடை
அமெரிக்க சட்டமன்றத்தால் , 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று இயற்றப்பட்டது. அதிபர் ஹாரி ட்ரூமன் வீட்டோ வாக்களித்தும் கூட, சட்டமன்றத்தால் இயற்றப்பட்டது. 1950 ஆம் ஆண்டின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என சொல்லப்படும் இதன் வழியே, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என நம்பப்படுபவர்கள் அனைவரையும் நாடு கடத்தும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டது அமெரிக்கா. பதிவு செய்யப்பட கம்யூனிஸ்ட் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு குடியுரிமை அனுமதி மறுக்கப்பட்டது.
நம்முடைய “உரிமைகள் மசோதாவை” பரிகாசம் செய்வது போலாகிவிடும் என ட்ரூமன் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 1993 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம், இது அரசியலமைப்பிற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த சட்டத்தின் சில பிரிவுகள் இன்னமும் அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கிறது.
5. ஈரானியர்களுக்கு தடை!
அதிபர் ஜிம்மி கார்டர் - ஏப்ரல் 7,1980
1979 ஆம் ஆண்டு, டெஹ்ரானில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்குள் புகுந்த இஸ்லாமிய புரட்சி ஆதரவு மாணவர்கள் 52 அமெரிக்கர்களை சிறைபிடித்து, அவர்கள் 444 நாட்களுக்கு பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். இதனால் ஈரானோடு உறவுகளை துண்டித்துக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர், ஈரான் நாட்டின் மீது தடைகள் விதித்தார். ஈரானியர்கள் நாட்டிற்குள் வருவதற்கும் அனுமதி மறுத்தார். இன்று, மீண்டும் ஈரான் பயணிகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்திருக்கிறார் ட்ரம்ப்.
6.ஹெச்.ஐ.வி பாசிடிவ் நபர்களுக்கு தடை!
ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போது, “அபாயகரமான தொற்று நோய்” பட்டியலில் எய்ட்ஸ் சேர்க்கப்பட்டது . 1987 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வி பாசிடிவ் நபர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆப்பிரிக்கர்கள் மற்றும் சிறுபான்மையினரை நோக்கியிருந்த எதிர்ப்பு உணர்வினாலும்,ஹோமோஃபோபிக் உணர்வினாலுமே இந்த சட்டம் இயற்றப்பட்டது. மேலும், ஹெச்.ஐ.வி சுவாசத்தின் வழியாகவும், தொடுதல் வழியாகவும் பரவும் எனும் தவறான நம்பிக்கையும் இந்த சட்டத்திற்கு காரணம். இதை ரத்து செய்ய ஜார்ஜ் புஷ் தொடங்கிய முயற்சியை ஒபாமா வெற்றிகரமாக 2009 ஆம் ஆண்டு முடித்தார்.
நன்றி - www.aljazeera.com
No comments:
Write comments