அதிமுக-வினரின் அதிகாரச் சண்டையால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற ‘எழுவோம் தமிழகமே' பிரச்சார இயக்கத்தில் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது: ‘அதிமுக-வினர் இரு பிரிவுகளாக பிரிந்து அதிகாரத்துக்காக சண்டையிட்டு வருவதால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி, நிர்வாகம் முறையாகச் செயல்படவில்லை. இத்தகைய செயல்படாத அரசால் மக்கள் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்தி மற்றொரு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வழிவகுக்கும் எண்ணத்தோடு திமுக செயல்படுகிறது. சட்டப் பேரவையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் செயல்பாடும் கண்டனத்துக்குரியது.
நெடுவாசல் போராட்டம் 18 நாள்களாக நடந்துவரும் நிலையில், மத்திய அரசு தனது தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கர்நாடக முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் போராட்டக் குழுவினரோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் ஆதார் அட்டை எண் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறினார்.
No comments:
Write comments