கடந்த வருடம் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என கோவில் ஒலிப்பெருக்கி மூலம் செய்தி பரப்பப்பட்டு முகமது அக்லாக் என்ற முதியவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது. இச்சம்பவத்தில் 20ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாட்டுக்கறி வைத்திருந்தார் என்பதற்காக முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அவர் வைத்திருந்தது மாட்டு இறைச்சி அல்ல என்றும் அது ஆட்டு இறைச்சி என்றும் தகவல் வெளியானது.
மீண்டும் கடந்த மே 31ஆம் தேதி கைப்பற்றப்பட்ட இறைச்சி மாட்டிறைச்சி அல்லது கன்று இறைச்சியாக இருக்கலாம் என செய்தி மாறி வந்தது. இந்நிலையில் மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காகவும், மாட்டை கொன்றதற்காகவும் முகமது அக்லாக்கின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பா.ஜ.க கூறி வருகிறது. இந்நிலையில் தாத்ரியில் மீண்டும் பஞ்சாயத்தில் கூடிய அக்கிராம வாசிகள் இன்னும் 20 நாட்களுக்குள் முகமது அக்லாக் குடும்பத்தினர் மீது மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் கைது செய்யப்பட்டவர்களை அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் விபரீதம் நடக்கும் என்று பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட காவல்துறை அதிகாரியை சந்தித்து முகமது அக்லாக்கின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என கொலை குற்றத்தில் ஈடுபட்ட விஷால் என்பவரின் தந்தை சஞ்சய் ரானா என்பவர் கூறினார். பா.ஜ.கவோடு தொடர்பில் இருக்கும் இவர் மேலும் கூறும்போது முகமது அக்லாக் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்பது நிரூபணமாகிவிட்டது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நஷ்ட ஈடு பணத்தை அரசு திரும்பப்பெற வேண்டும். எங்களுடைய பிள்ளைகளை கொலை வழக்கில் கைது செய்துள்ளதுபோல் அக்லாக்கின் குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனால் தாத்ரியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சூழ்நிலையை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக மேலும் கூடுதல் போலிஸார் குவிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளே இப்பிரச்சனையை பூதகரமாக ஆக்குகிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தினரை உசுப்பேத்தி விடுவதாக காவல்துறை அதிகாரி தர்மேந்திரா சிங் தெரிவித்தார்.

No comments:
Write comments