சிங்கப்பூரில் புகை பிடிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
புகை பிடிப்பதால் குழந்தைகள் மற்றும் பிறருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் புதிய விதிகளை சிங்கப்பூர் அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி, புகைபிடிக்க கட்டுப்பாடு உள்ள 32,000 இடங்களின் பட்டியலில் 400 தனியார் மற்றும் பொது பூங்காக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை மேலும் கடுமையாக்கும் வகையில் அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு புதிய கட்டுப்பாடு பழகும் வகையில் முதல் 3 மாதங்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பூங்காக்களில் சிகரெட் பிடித்தால் எச்சரித்து அனுப்பப்படுவர். தொடர்ந்து இதே பிழையை செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சிங்கப்பூரில் 18 வயது முதல் 69 வயது வரை உள்ள 14.3 விழுக்காடு பேர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பூங்காக்களில் புகை பிடிப்போருக்கு 2000 டாலர்களும், தடை செய்யப்பட்ட பிற இடங்களில் புகை பிடிப்போருக்கு 1000 டாலர்களும் அபராதம் விதிக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் விதிமுறைகளை மீறிய 17,000 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments