குற்றாலம் சீசன் தொடங்குவதையொட்டி திருநெல்வேலி-செங்கோட்டை இடையே தினமும் இரவில் சிறப்புப் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் இன்னும் சில நாள்களில் சீசன் தொடங்கும் அறிகுறிகள் உருவாகியுள்ளன. தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தீவிரமடையும் சூழலில் குறைந்தது 60 நாள்களுக்கு குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.
இந்த அருவிகளில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ரயில், பேருந்து மூலம் திருநெல்வேலிக்கு வந்து இங்கிருந்து குற்றாலத்துக்குச் செல்வது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ரயில் பயணத்தைப் பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு சிறப்புப் பயணிகள் ரயிலை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி சந்திப்பைச் சேர்ந்த ராமமூர்த்தி கூறியதாவது: திருநெல்வேலி-செங்கோட்டை இடையே காலை 6.20, 9.30, மாலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இதே நேரத்தில் மறு மார்க்கத்தில் இருந்தும் ரயில்கள் புறப்படுகின்றன. குற்றாலம் சீசன் காலங்களில் இந்த பயணிகள் ரயில் அதிக கூட்டத்தோடு இயக்கப்படுகிறது. இதனால் சீசன் காலங்களில் மட்டும் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் திருநெல்வேலியில் இருந்து ஒரு சிறப்புப் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி-குற்றாலம் இடையேயான சாலை போதிய அளவுக்கு சீரமைக்கப்படாமல் உள்ளதால் இந்த பயணிகள் ரயில் மிகுந்த வரவேற்பைப் பெற வாய்ப்பு உள்ளது.
இதுதவிர தூத்துக்குடி,விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் இரவில் புறப்பட்டுச் சென்று குற்றாலத்தில் குளித்துவிட்டு காலையிலேயே ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். அதனால் அவர்களுக்கு இரவு நேர பயணிகள் ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
கடைகளுக்கு சிறப்பு அனுமதி:
குற்றாலத்துக்கு கார்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணியைக் கடந்து திருநெல்வேலிக்கு வந்து சாலையோர கடைகளில் மட்டுமே சாப்பிட்டுச் செல்வதைக் காண முடிகிறது. ஆனால், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சாலையோரக் கடைகளுக்கு தினமும் இரவு 11.45 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் சில பயணிகள் இரவு உணவு சாப்பிட முடியாமல் தவிக்கிறார்கள்.
ஆகவே, சீசன் காலங்களில் மட்டும் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு 2 மணி வரை உணவு விடுதிகளைத் திறந்து வைக்கவும், அதற்கு போலீஸார் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments