தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தின் வருடாந்திர மழைப் பொழிவு வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவ மழையால் கிடைக்கிறது. இதுதவிர புயல் சின்னங்கள், காற்றழுத்தாழ்வு மண்டலங்களால் கடலோர மாவட்டங்கள் மழையை பெறுகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையின் மூலம் வருடாந்திர மழைப்பொழிவில் 48 சதவீதமும், தென்மேற்கு பருவமழையின் மூலம் 32 சதவீத மழைபொழிவும் கிடைக்கிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இரண்டு நாட்களில் அதிக அளவில் மழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் வழக்கமான அளவை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவாகும். ஆனால், இப்போது அதிகபட்ச வெப்பநிலையாக 37.6 டிகிரி செல்சியஸ் புதுச்சேரியில் பதிவாகி உள்ளது. இதனால் வெப்பசலனம் ஏற்பட்டு, சில வாரங்களாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் எந்த அளவுக்கு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும். இதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். உள் மற்றும் மத்திய மாவட்டங்களில் அதைவிட வெப்பநிலை சற்று கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று பகல்பொழுதில் மழை பதிவாகவில்லை. அடுத்த சில நாட்களிலும் பகல் பொழுது வெப்பமானதாக இருக்கும். வெப்பசலனம் காரணமாக மாலை, இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், வேலூர், நீலகிரி மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் ஏற்படும் மழைக்கு வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments