குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் ஜாமீன் பெற்று பிரிட்டனில் தஞ்சமடைந்த நபரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, குஜராத் காவல் துறை அதிகாரிகள் லண்டன் சென்று அந்த நபரை இந்தியாவுக்கு அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி அயோத்தியிலிருந்து வந்துகொண்டிருந்த சபர்மதி ரயிலின் ஒரு பெட்டியை முஸ்லிம்கள் எரித்ததாகக் கூறப்படுகிறது. அதில், அந்தப் பெட்டிக்குள் இருந்த ஹிந்துக்கள் 57 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதையடுத்து, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. அவ்வாறு, 2002-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி ஆனந்த் மாவட்டம், ஓட் எனும் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது ஒரு வீட்டுக்குள் இருந்த முஸ்லிம்கள் 23 பேர், ஒரு கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் சமீர் வினுபாய் படேல் (40) உள்பட பல்வேறு நபர்களை காவல் துறை கைது செய்தது. அவர்களில், சமீர் வினுபாய் படேல் ஜாமீன் பெற்று லண்டனுக்குச் சென்று தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி இன்டர்போல் உதவியை நாடியது. இதையடுத்து, லண்டனில் பதுங்கி இருந்த சமீர் வினுபாய் படேலை ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில், வினுபாய் படேலை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு வியாழக்கிழமை அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே குற்றவாளிகளை நாடுகடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments