பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் எழுந்துள்ளதன் காரணமாக 'டைம்ஸ் நவ்' தலைமை ஆசிரியர் அர்ணாப் கோசுவாமிக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து அர்ணாப் கோசுவாமிக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மத்திய அரசு அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
செய்தியாளர் அர்ணாப் கோசுவாமிக்கு இரு சொந்த பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 20 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத உள்துறை அமைச்சக அதிகாரி கூறியதாவது, "உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மத்திய அரசு கோசுவாமிக்கு பாதுகாப்பு வழங்க உள்ளது. உளவுத்துறை பரிந்துரையின்படி நாங்கள் பணிபுரிகிறோம். டைம்ஸ் நவ்வில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதன் காரணமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து அர்ணாப் கோசுவாமி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டு உள்ளார்,” என்று தெரிவித்தார்.
டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தும் அர்ணாப் கோசுவாமி, உரி பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கோசுவாமிக்கு இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இச்செய்தி தொடர்பாக அர்ணாப் கோசுவாமி தரப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அர்ணாப் கோசுவாமிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மராட்டிய மாநில அரசு பார்த்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
அர்ணாப் தவிர பிற செய்தியாளர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜி நியூஸ் சுதிர் சவுத்ரி ('எக்ஸ்' பிரிவு) சமாச்சார் பிளஸ் செய்தியாளர்கள் உமேஷ் குமார் ('ஒய்' பிரிவு) மற்றும் அஷ்வினி குமார் சோப்ராவிற்கும் (இசெட் பிளஸ் பிரிவு) பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.
No comments:
Write comments