வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பாம்பன், கடலூர், நாகை துறைமுக அலுவலகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, நாகை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பகல் மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக, நாகப்பட்டினத்தில் 137 மி.மீ மழை பதிவானது.
பிற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்): திருப்பூண்டி - 62.6, தலைஞாயிறு - 53.8, மயிலாடுதுறை - 46.5, வேதாரண்யம்- 41.7, சீர்காழி- 38.7, ஆணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) - 21, மணல்மேடு - 8.4, தரங்கம்பாடி - 6.
வியாழக்கிழமை பகல் நேரத்தில் மந்தமான மற்றும் குளிர் வானிலை நீடித்தது. இருப்பினும், மாலை வரை மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க மழையில்லை.
1-ஆம் எண் புயல் எச்சரிக்கை: விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கு திசையில் 650 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
பாம்பன்: பாம்பன் கடலில் கடந்த புதன்கிழமை முதல் பலத்த சூறாவளி வீசி வருகிறது. அந்தப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடிக்க வேண்டாம் எனவும், கரையோரங்களில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடலூர்: கடலூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2ஆவது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மீன்பிடி தொழில் பாதிப்பு: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அலைகள் வழக்கத்தைவிட அதிக உயரமாக எழுந்ததால் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கடலூர் துறைமுகம், தேவனாம்பட்டினம், தாழங்குடா, சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, ராசாபேட்டை உள்பட 50-க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்களது விசைப்படகு, பைபர் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால், மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் சாவு: கடலூர் தாழங்குடா பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் கோவிந்தன் (55). இவர் புதன்கிழமை உப்பலவாடியிலில் கடலுக்குள் இறங்கி தூண்டில் வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கிய கோவிந்தன் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவரது சடலத்தை ரெட்டிச்சாவடி போலீஸார் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments