மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் அக்டோபர் 3ஆம் நாள், மத்திய சிறையில் இருந்து தப்பியதாக சொல்லி 8 முஸ்லிம் இளைஞர்களை மத்தியப் பிரதேச பாஜக அரசின் காவல்துறை சுட்டுக் கொன்றிருக்கிறது. என்கவுன்டர் என்று சொல்லப்படும் இந்தப் படுகொலை பாஜக அரசினால் நடத்தப்பட்டிருப்பதே அதன் மீது சந்தேகம் கொள்வதற்குப் போதுமான காரணம் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறியுள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
குஜராத்தில் முஸ்லிம்கள் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இப்போது வெளியில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இதுவே மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் துணிச்சலைக் கொடுத்திருக்கும்.
8 பேர் சிறையில் இருந்து தப்பித்ததற்கு போபால் சிறைத்துறை சொல்லும் கதையும் நம்பும்படியாக இல்லை. பல் துலக்கும் துலப்பான் (டூத் பிரஷ்) வைத்து பூட்டைத் திறந்தார்கள் என்கிறார்கள். ஒரு துலப்பானை வைத்து அதிபாதுகாப்பு கொண்ட சிறையின் கதவைத் திறக்கலாம் என்றால் சாதாரண சிறைகளின் கதவு கை வைத்தாலே திறந்துகொள்ளுமா என்று அவர்களின் வழக்கறிஞர் கேட்டிருக்கிறார்.
சிறையில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டவர்கள் எப்படி நடு இரவில் எல்லா கதவின் பூட்டுகளையும் உடைத்துக் கொண்டு சிறைக்குள் ஒன்றிணைந்தார்கள். 32 அடி உயர சுவரை போர்வையைக் கொண்டு தாண்டி முடியுமா? வெளியில் வந்த உடனேயே அவர்கள் கார்ப்பரேட் கம்பெனி பணியாளர்களைப் போன்று மிடுக்காக மாறியது எப்படி?
போபால் காவலர்கள் போட்டிருக்கும் காலணி அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? சிறையில் இருந்து தப்பிச் செல்பவர்கள் வெவ்வேறாக ஓடாமல் கூட்டாக சேர்ந்தே இருப்பார்கள் என்று யாராவது நம்புவார்களா? இந்தி திரைப்படங்களில் கூட இதுபோன்ற கதைகளை சொல்ல மாட்டார்கள்.
திக்விஜய் சிங், அரவிந்த் கெஜ்ரிவால், ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் நியாயமான சந்தேகம் எழுப்பியிருக்கிறார்கள். நீதிபதி கட்ஜு சொல்லியிருப்பதைப் போன்று இந்தப் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். முதல்வர் சௌகான் என்கவுண்டர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் நெறிமுறைகள்படி நடக்க முடியாது என்று கூறியுள்ளார்.
என்கவுண்டரில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து நீதி விசாரணைக்கு உட்பட்டே பிறகே பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இதை ஏற்க மறுத்துவிட்ட சௌகான் அரசை தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரைக்க அதிகாரமுண்டு.
இந்தக் கொலைகளை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து ஒரு வழக்காக எடுத்துக் கொண்டு, பரிதவித்து நிற்கும் அவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments