சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியதால் 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நேரத்தில் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக மறுநாள் காலையும் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, ஜெர்மனி ஆகிய வெளிநாட்டு விமானங்களும், கொல்கத்தா, திருச்சி உள்ளிட்ட பல உள்நாட்டு விமானங்களும் குறித்த நேரத்தில் புறப்படவில்லை. இதையடுத்து, மழை குறைந்ததும், ஓடுபாதையில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றிய பிறகே புறப்பட்டுச் சென்றன. இதேபோல், சென்னைக்கு டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் நீண்டநேரம் வானிலேயே சுற்றிவிட்டு பின்னர் தாமதமாக தரையிறங்கின.
வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு சில நாட்களே ஆன நிலையில் இதுவரை சென்னையில் மிகப் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. எனினும், பெய்த மிதமான மழை காரணமாக மொத்தம் 12 விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பயணிகள், பருவமழை துவங்கியுள்ள சூழலில் விமான நிலைய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஏனெனில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு சென்னை விமான நிலையத்தில் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக விமான சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments