நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை மேற்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அமல்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதம், இழப்பீடு கொள்கை உள்ளிட்ட அம்சங்களை முடிவு செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
முன்னதாக நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்கு வரி விகிதம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னதாக பரிந்துரைக்கப்பட்ட நான்கு அடுக்கு வரி விகிதத்தையே கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வரி விகிதத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, குறைந்தபட்ச வரி விகிதமாக 5 சதவிகிதம், நிலையான வரி விகிதமாக 12 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம், அதிகபட்சமாக ஆடம்பரப் பொருட்களுக்கு 28 சதவிகிதம் என நான்கு அடுக்கு வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெட்லி கூறுகையில், “திட்டமிட்டபடி, ஜி.எஸ்.டி. மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுப்பொருட்களுக்கும், அதிகம் வாங்கும் பொருட்களுக்கும் 5 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படும். 30 முதல் 31 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்படும். புகையிலை பொருட்களுக்கு 40 சதவிகித வரி விதிக்கப்படும். குடிநீர் பானங்கள், பான் மசாலா, ஆடம்பரக் கார்கள், ஆகியவற்றுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்படும். ஜி.எஸ்.டி. மசோதா அமல்படுத்தப்பட்ட பின்னர், முதல் வருடத்தில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்ய ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும்” என்றார்.
No comments:
Write comments