பல்வேறு சறுக்கல்கள் இருந்தாலும், உலகிலேயே ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரரீதியாக வல்லரசாகத் திகழும் நாடு அமெரிக்கா.
அந்நாட்டில் அதிபராக இருப்பவர், அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட்டுப்பட்டவர் அல்ல. எந்த விஷயத்திலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் எளிதல்ல. தேசத்துரோகம், கொள்ளை உள்ளிட்ட மோசமான குற்றங்களுக்காக வேண்டுமானால், அவர் மீது நாடாளுமன்றம் விசாரணை நடத்தி பதவிநீக்க முடியும். வேறு தண்டனை ஏதும் வழங்கிவிட முடியாது. தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் வலிமை அவருக்கு உண்டு. உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவானதிலும், ஜப்பான் முதல் இராக் வரை பல நாடுகள் பேரழிவைச் சந்தித்ததிலும் அன்றைய அமெரிக்க அதிபரின் பங்கே அதிகமானது.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. இரு முக்கிய வேட்பாளர்களுமே சர்ச்சையில் சிக்கியுள்ளனர் என்பதும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. இரு முக்கிய வேட்பாளர்களுமே சர்ச்சையில் சிக்கியுள்ளனர் என்பதும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்.
முன்பு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் தங்கள் பதவிக் காலத்தில்தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். ஆனால், இப்போது, அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவருமே குற்றச்சாட்டுகளுடனும், சர்ச்சைகளுடனும்தான் தேர்தலையே சந்திக்கின்றனர்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது பல பெண்கள் அடுக்கடுக்காக பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்பு வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அலுவலகப் பயன்பாட்டுக்கு தனிப்பட்ட இ-மெயிலைப் பயன்படுத்திய சர்ச்சையை எஃப்.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
அதிபராக ஹிலாரி தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். இப்போதைய சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பில் டிரம்ப்பைவிட ஹிலாரி ஒருபடி முன்னே இருக்கிறார் என்று பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் ஜனநாயகத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாதத்தில் ஹிலாரியின் கையே ஓங்கியது. மேலும், சர்ச்சைக்குரிய பேச்சுகளும், பல பெண்கள் கூறிய குற்றச்சாட்டுகளும் டிம்ரப்புக்கு சிறிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. எனினும், வாக்குப்பதிவின்போது காற்று யார் பக்கம் வேண்டுமானாலும் வீச வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது வழக்கமான நிகழ்வுதான்.
தேர்தல் முறை
அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது, அதிபர், துணை அதிபர் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகும். ஒவ்வொரு லீப் ஆண்டிலும் நவம்பர் மாதத்தில் வரும் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நம்பர் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்தால் அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர் நாடு முழுவதும் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் மட்டும்போதாது, மாகாண ரீதியில் தேர்வாளர் குழுவின் (எலெக்டோரல் காலேஜ்) வாக்குகளை அதிகம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். 228 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் அரசியல் சட்டப்படி மாகாண அளவிலான தேர்வாளர் குழு மூலமாகவே அதிபரும், துணை அதிபரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனினும், இந்தத் தேர்வாளர் குழு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால், மாகாண வாரியாக மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்தான் அதிபராகவும், துணை அதிபராகவும் முடியும்.
அமெரிக்காவின் 50 மாகாணங்கள், மத்திய அரசின் ஆட்சிக்கு உள்பட்ட தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றில் இருந்து 538 தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பல்வேறு மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் தேர்தல் முடிந்த பிறகு வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமைக்கு அடுத்து வரும் திங்கள்கிழமை அந்தந்த மாகாணத் தலைநகரங்களில் கூடுவார்கள். 51 இடங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டம் நடக்கும். வாக்குச் சீட்டு மூலம் அதிபருக்கான வாக்கை தேர்வாளர்கள் அளிப்பார்கள். அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே நடைமுறையில் துணை அதிபரும் தேர்வு செய்யப்படுவார். பெரும்பாலான மாகாணங்களில் அதிக வாக்குகளை (சில மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான) ஒரு வேட்பாளர் பெற்றால், அந்த மாநிலத்தின் அனைத்து தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார். ஒரு சில மாகாணங்களில் மட்டுமே விகிதாசார முறைப்படி தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்தல் ஆணையம் கிடையாது
அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்த தனியாக நாடு தழுவிய அளவில் தேர்லை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அமெரிக்காவைப் பொருத்தவரை தேர்தலை நடத்தும் பொறுப்பு மாகாணங்களிடம்தான் உள்ளது. அந்தந்த மாகாண சட்டத்துக்கும், மத்திய அரசியல் சட்டத்துக்கும் உள்பட்டு வெவ்வேறு முறைகளில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி பலமாக உள்ளது. டெக்ஸôஸ், அலபாமா உள்ளிட்ட சில மாநிலங்கள் குடியரசுக் கட்சியின் கோட்டையாக உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் அந்தந்த கட்சிகள் தேர்வாளர் குழுவுக்குத் தேவையான பெருவாரியான வாக்குகளைப் பெற்றுவிடும். அதே நேரத்தில் காலங்காலமாக இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்களை அதிகம் கொண்ட ஃபுளோரிடா, கொலராடோ, மிச்சிகன், விஸ்கான்சின், ஒஹையோ உள்ளிட்ட 11 மாகாணங்களில்தான் (ஸ்விங் ஸ்டேட்ஸ்) வாக்குகளைப் பெற கடும் போட்டி நிலவி வருகிறது.
No comments:
Write comments