Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 15, 2016

தொடரும் துயரம்!


இந்தியா முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் மக்களின் துன்பங்களை போக்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை, நிதி, நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் துணை ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், பொது மக்களின் தேவைக்குப் பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து பொதுமக்கள் எந்த விதமான பதற்றமும் அடைய தேவை இல்லை. ரிசர்வ் வங்கியில் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது. மக்களுக்கு பணம் கிடைப்பதற்கான வழிகள் வருகிற நாட்களில் மேலும் அதிகரிக்கப்படும். அரசு அறிவித்த செலவினங்களுக்கு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு 14ஆம் தேதியுடன் (நேற்று) முடிவடைவதாக இருந்தது. இந்த காலக்கெடு 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரிகள், கட்டணம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகளுக்கு பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவு கடைகள் (அடையாள அட்டையுடன்), தகன மேடை, இடுகாடு ஆகியவற்றில் பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகளை வருகிற 24ஆம் தேதி வரை பயன்படுத்தலாம். மேலும் ரெயில் டிக்கெட், மெட்ரோ ரெயில் டிக்கெட், பொது போக்குவரத்து, விமான டிக்கெட் எடுக்கவும், மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்தவும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வாங்கவும், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பெறவும் இந்த நோட்டுகளை பயன்படுத்தலாம். தண்ணீர், மின்சாரம் போன்ற வீட்டு பயன்பாட்டு கட்டணங்களில் முன்பணமாகச் செலுத்த இந்த நோட்டுகளை பயன்படுத்த முடியாது. நகர்ப்புறங்களில் உள்ள ஏடிஎம். மையங்கள் அனைத்தும் புதிய ரூபாய் 2000 நோட்டுகள் வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் நிதி, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஏடிஎம் தொழில்நுட்ப மாற்றியமைப்பு பணிகளை துரிதப்படுத்துவதுடன், மக்களுக்கு வேகமாக பணம் கிடைப்பதற்கான வழிகளை இவர்கள் உறுதி செய்வர்.
இந்தப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) முதல் புதிய ரூபாய் 2000 நோட்டுகளை ஏடிஎம்மில் இருந்து பெறலாம். இதைப்போல புதிய ரூபாய் 500 நோட்டுகளும் புழக்கத்தில் வந்துள்ளன. மேலும் மக்கள் ஏடிஎம்கள் மூலம் சுலபமாக பணம் பெறும் வகையில் ஏராளமான மைக்ரோ – ஏடிஎம்கள் உருவாக்கப்படும். ஒருவர் நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறு வணிகர்களின் வியாபார தேவைகளை கருத்தில் கொண்டு அவர்கள் பணம் எடுக்கும் உச்சவரம்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வணிகர்கள் தங்கள் நடப்பு கணக்கில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.50,000 வரை எடுக்க வழி செய்யப்படுகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தவிர்க்க முடியாத சூழல்களை தவிர மற்ற நேரங்களில் தங்கள் பண பரிவர்த்தனைகளை ஆன்–லைன் மூலமே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் இதற்கான பரிவர்த்தனை கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு தேசிய செலுத்து கழகம் மற்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. கிராமப்புறங்களைப் பொருத்தவரை அங்கு வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நிதி நிறுவனங்களின் கையிருப்பு தொகை ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இதன் மதிப்பை பல மடங்காக வங்கிகள் உயர்த்தும். அத்துடன் 1.30 லட்சம் கிளை தபால் நிலையங்களில் பணம் மாற்றவும், வழங்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருக்கும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் விநியோக மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு அதிக அளவிலான பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”. இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.
மேலும், மாவட்டக் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 24ஆம் தேதி வரை தங்கள் கணக்கில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.24,000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனினும் இங்கு ரூபாய் 500, 1000 நோட்டுகளை மாற்றவோ, இந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவோ முடியாது எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 18ஆம் தேதி நள்ளிரவு வரை கட்டண வசூல் இல்லை எனவும், இது தொடர்பாக அனைத்து வசூல் நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic