பாட்னா(26 நவ 2016): ரூ. 500 மற்றும் 1000 தடைக்கு முன்பு பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க வினர் தம்மிடம் இருந்த கருப்புப் பணத்தை வைத்து சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகாரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சஞ்சீவ் சவ்ராசியா என்பவர், இது குறித்து கூறுகையில், “இது போன்ற நிலங்கள் எல்லா இடங்களிலும் வாங்கப்பட்டுள்ளது. பீகாரோடு சேர்த்து பிற இடங்களிலும் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பணம் கட்சியில் இருந்து வருகிறது. இந்த இடங்கள் கட்சி அலுவலகங்களை கட்டவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் வாங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நவம்பர் முதல் வாரத்தில் வாங்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
சவ்ரேசியாவின் கூற்றுப்படி பணம் செல்லாததாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பா.ஜ.க தங்களது பணத்தை பல கட்டங்களாக நிலமாக மாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் 250 சதுர அடியில் இருந்து அரை ஏக்கர் வரையிலான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களின் மதிப்பு 8 லட்சத்தில் இருந்து 1.16 கோடி வரை உள்ளது என்று கூறப்படுகிறது. இதில் மிகவும் விலை அதிகாமாக ஒரு சதுர அடிக்கு 1,100 ரூபாய் கொடுக்கப்பட்டும் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்களை வாங்குவதற்கான பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டதா அல்லது காசோலை மூலம் கொடுக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு பல வகைகளில் இந்த பணம் அனுப்பப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்று வாங்கப்பட்ட நிலங்களில் சில பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வின் பெயரிலும் வாங்கப்பட்டதையும் அந்த செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது
இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Write comments