‘தமிழகச் சட்டமன்றத்தில் அமைக்க வேண்டிய குழுக்களை விரைந்து அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஐந்து பக்க மனு ஒன்றை ஆளுநரிடம் நேற்று முன்தினம் (02-12-2016) அன்று வழங்கிய ஸ்டாலின், “பலமுறை வலியுறுத்தியும் சட்டமன்றக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. அதனால் ஆளுநரைச் சந்தித்து சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்தார்” என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், “ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்ற நிலைக்குழு அமைக்கக்கோரி நீதிமன்றத்தை அணுக வேண்டி இருக்கும்” என்றும் ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்றக் குழுக்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது சபாநாயகர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில் அதுபற்றி எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பதால் பின்னர் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளரிடமும், பேரவைச் செயலாளரிடமும் மனு அளித்தார். அப்போது வெளியில் வந்து பேசிய ஸ்டாலின் “நடவடிக்கை இல்லை என்றால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என்றார். ஆனாலும் அந்த நினைவூட்டல் கடிதங்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்கிற நிலையில் இப்போது ஆளுநரிடம் மனு கொடுத்துள்ள ஸ்டாலின், இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடப் போவதாக தெரிவித்தார்.
ஆண்டுக்கு இருமுறை தமிழகச் சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்கிற நிலையில் அதிமுக அரசு பதவியேற்ற பின்னர் ஒரே ஒரு சட்டமன்றக் கூட்டத்தையே நடத்தியுள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க வேண்டிய நிலையில் எப்போது அவையைக் கூட்டுவார்கள் என்பதும் தெரியவில்லை. காவிரி, ஜல்லிக்கட்டு விவகாரங்களில் கூட பல கட்சிகள் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று கூறியபோதும் அதுபற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் அவையை கூட்டியாக வேண்டும் என்கிற நிலையில், இப்போதைய சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 89 ஆக உள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருந்தால் அதன் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்திருக்கும்.
இதையே தர்மபுரி திமுக சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி மகன் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின் அங்கு பேசும்போது “மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக மாறிவிடும்” என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் மூன்று தொகுதிகளிலுமே திமுகவை வீழ்த்தி அதிமுக வென்று விட்டது. 134 ஆக இருந்த அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்தது. இடைத்தேர்தல்தான் என்றாலும் தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்களில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வென்றிருப்பது திமுக-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்னும் நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதை வெற்றி பெற வைக்க முடியுமா என்பதை ஸ்டாலின் யோசித்து வந்த நிலையில் திமுக வழக்கறிஞர்கள்தான் சட்டமன்றக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக நீதிப்போராட்டத்தை நடத்தினால் அதில் நீதி கிடைக்கும் அல்லது அரசுக்கு நெருக்கடி உருவாகும் என்று நினைக்கிறார்கள்.
“அவசர அவசரமாக அறிவித்த உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் அந்த அறிவிப்பாணைக்குத் தடை விதித்ததோடு அந்த தடை இப்போதும் நீடிக்கிறது. அதனால் அதே வழியில் நியாயம் கேட்கலாம் என்பதால்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் என்ற கோரிக்கையை விட்டுவிட்டு சட்டப் போராட்டம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் ஸ்டாலின்” என்கிறார்கள் திமுக-வினர்.

No comments:
Write comments