டாடா குழுமத்தின் தற்காலிக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ரத்தன் டாடா மிகப்பெரிய ஊழல்வாதி என்றும் அவர், சிரஸ் மிஸ்ட்ரியை பணிநீக்கம் செய்தது நியாயமற்ற செயல் என்றும் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த வாரம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து சிரஸ் மிஸ்ட்ரி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக முன்னாள் தலைவரும் மூத்த தொழிலதிபருமான ரத்தன் டாடா தற்காலிக தலைவராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். இவர் அடுத்த நான்கு மாதங்கள் மட்டுமே தலைவர் பொறுப்பில் இருப்பார் என்றும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் டாடா குழுமம் தீவிரமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட சிரஸ் மிஸ்ட்ரிக்கு ஆதரவாகவும் ரத்தன் டாடாவை எதிர்த்தும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். ராணிப்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “ரத்தன் டாடா மிகப்பெரிய ஊழல்வாதி ஆவார். அவர் சர்ச்சைக்குரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏர் ஏசியா விமான நிறுவன ஊழல், ஜாகுவார் மோட்டார் ஒப்பந்தம், விஸ்தாரா விமான ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் சம்பந்தப்பட்டவர். டாடா நிறுவனம் சந்தித்த தலைவர்களிலேயே ரத்தன் டாடாதான் ஊழல்மிக்கத் தலைவர்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சிரஸ் மிஸ்ட்ரி சிறப்பாகவே பணியாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பணி குறித்து டாடா குழுமத்தின் உயர்மட்டக் குழு பாராட்டியிருந்தது. ஆனால் பொறாமை காரணமாக சிரஸ் மிஸ்ட்ரியை நீக்கிவிட்டு தானே தலைவர் பொறுப்பில் அமர்ந்துகொண்டவர்தான் ரத்தன் டாடா. ரத்தன் டாடா உண்மையில் டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவரது தந்தை டாடா குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்டவர். டாடா - மிஸ்ட்ரி விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்”. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய முறையில் டாடா குறித்துப் பேசியுள்ளார்.
No comments:
Write comments