காவேரி டெல்டா பகுதிகளில் போதிய நீரின்று விவசாயம் அழிந்து போன அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென சி.பி.எம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி முற்றிலும் செய்யப்படவில்லை. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் படி தண்ணீர் திறக்காததாலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாததாலும் இவ்வாண்டு சம்பா சாகுபடியும் டெல்டா பிரதேசத்தில் முழுமையாக செய்யப்படவில்லை.
ஒரு பகுதி விவசாயிகள் நாற்று விட்டு நடவு செய்வதற்கு பதிலாக நேரடி நெல்விதைப்பு செய்தனர். இதற்கும் போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்காததால் நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிரும் பெரும்பான்மையாக கருகி விட்டது.
இதனால் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த அழகேசன் என்ற குத்தகை விவசாயி இரண்டு ஏக்கர் நிலத்தில், தான் செய்த சம்பா பயிர் முளைக்காமல் கருகி இருந்ததை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே மயக்கமுற்று இறந்துவிட்டார்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த கீழத்திருப்பந்துருத்தியைச் சார்ந்த ராஜேஷ்கண்ணன் என்ற விவசாயி இரண்டு ஏக்கர் நிலத்தில் குத்தகைக்கு எடுத்து நேரடி நெல்விதைப்பு செய்திருந்தார். இவரது வயலிலும் பயிர்கள் காய்ந்து கருகி விட்டது. இவரும் தான் சாகுபடி செய்து பயிர் கருகி விட்டதை கண்டு மனமுடைந்து இறந்துவிட்டார்.
இதைப்போலவே திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர் தண்ணீர் இல்லாமல் கருகியதால் அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் கூறியுள்ளார்.
குறுவை சாகுபடியும் பொய்த்து, சம்பா சாகுபடியும் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நிலையில் டெல்டா பிரதேச விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் விவசாயிகள் தற்கொலையும், அதிர்ச்சியடைந்து மரணமடையும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மீதி இருக்கக் கூடிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்காவது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீரை பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் தலா ரூ. 10 லட்சம் நட்ட ஈடு வழங்குவதோடு, பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000/-மும், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments