Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 5, 2016

சுசீலா பெரியம்மா...

நாட்டுக்கானவர்களையும் சமூகத்துக்கானவர்களையும் போற்றுவதும் பாடுவதும் நம் மரபு. போற்றுதலுக்குரிய மரபு. வீட்டுக்கானவர்களும் குறைந்துபட்டவர்களா என்ன? வீடு சேர்ந்துதானே நாடு! அடுப்பூதும் பெண்ணுக்குப் பாடல் பெறும் தகுதி இல்லையா ? இதோ என் பாட்டுக்குரியவள்...

எலுமிச்சம்பழ நிறம்; குட்டையுமல்லாத நெட்டையுமல்லாத இச்சமூகம் பெண்களுக்கென்று வரையறுத்து வைத்திருக்கும் அளவான உயரம்; உயரத்திற்கேற்ற அளவான உடல்வாகு; அறுபது வயதிலும் புசுபுசுவென்றிருக்கும் கன்னங்கள்; தலையில் ஆங்காங்கே வெள்ளி நரம்புகள்; பல வருடங்களாக வைத்த குங்குமத்தினால் கருப்பான நடுவகிடின் நுனி, இன்றும் சிறிது குங்குமத்தைத் தாங்கி அவள் நிறத்தையும் முகத்தையும் இன்னும் அழகாய்க் காட்டுகின்ற நெற்றி; ஒவ்வொரு கையிலும் இரண்டு மெல்லிய தங்க வளையல்கள் போக அவள் சமீபமாகப் போய் வந்த கோயிலை அவள் சொல்லாமலே நமக்குணர்த்தும் கயிறு; ஒன்றிரண்டு வியர்வைத் துளிகளுடன் அழுந்தப் பதிந்த கருவளையங்கள்; ஆடம்பரமில்லாத, ஆனால் நல்ல சேலை; அச்சுக் கோர்த்தது போன்ற அழகிய பல்வரிசை (அட! பல்செட்தாங்க…); எப்போதும் குறுநகையணிந்த மலர்ந்த முகம்.

இதை வாசித்து முடித்ததும், சுசீலா பெரியம்மா உங்கள் மனக்கண்ணில் தோன்றுவதை நானே பார்க்கிறேன். சுசீலா பெரியம்மா உங்கள் அம்மாவைப் போல என் அம்மாவைப் போல தன்னலமற்றவள்; பிரமாதமாக சமைப்பாள்; பிள்ளைகளை உயிராய் வளர்ப்பாள் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனினும் ஏதோ ஒன்று அவளைப் பற்றிக் கிறுக்கச் சொல்கிறது.

சுசீலா பெரியம்மா வீட்டுப் பெரியப்பா- செல்லையா. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள். சுசீலா பெரியம்மா வாழ்க்கைப்பட்டது ஒரு கூட்டுக் குடும்பத்தில்: மாமனார், மாமியார் (வடிவீஸ்வரத்து தாத்தா, ஆச்சி என்றே சொல்லிப் பழக்கம்), கொழுந்தன், ஓர்ப்படி, அவர்களது 2 பெண் பிள்ளைகள். இப்போதெல்லாம் இதுவே கூட்டுக் குடும்பந்தானுங்களே….!

வடிவீஸ்வரத்தில் இவர்கள் குடியிருக்கும் அந்த நீ….ளமான அக்ரஹாரத்து வீட்டையும் சுசீலா பெரியம்மா மற்றும் வடிவீஸ்வரத்து ஆச்சியின் நிறத்தையும் வைத்து அவர்களை பிராமணர்கள் என்றே வெகு காலமாக நம்பிக்கொண்டிருந்தேன். “அது எப்படி நாம பிராமணர்களுக்குச் சொந்தமானோம்?” எனக் குழம்பிக் கொண்டிருந்த போது ஒரு நாள் “வடிவீஸ்வரத்து ஆச்சி உன் அம்மாவுக்கு அப்பா கூடப் பிறந்த  அத்தை….அதனால அவங்க பிராமின்ஸ் இல்ல….அப்புறம், கலரா இருக்குறவங்க எல்லாம் பிராமின்ஸ்னு உனக்கு எந்த மடையன் சொன்னான்?” என்று செல்லமாகக் குட்டு வைத்தார்கள் அப்பா.

சுசீலா பெரியம்மா வீட்டிற்கு 4 அல்லது 5 முறைதான் சென்றிருப்பேன். ஒவ்வொரு முறையும் வீட்டின் நடுக்கட்டான அடுப்பங்கரையில் இருந்து, விசில் சத்தத்தோடு (பெரியம்மா இல்லைங்க…குக்கர் !) “வாங்க…வாங்க” என்ற குரல் வரவேற்கும். முகத்தைப் பார்க்காமல் குரலிலேயே மகிழ்ச்சி ததும்புவதை உணரலாம். எட்டிப் பார்க்கையில், புகையினூடே கண்கள் எரிவதையும் பொருட்படுத்தாமல் மலர்ந்து சிரித்துக்கொண்டே வரவேற்றுக் கொண்டிருப்பாள் பெரியம்மா. எங்களைக் கண்டதும் அவசர அவசரமாக அடுப்பைக் குறைத்துவிட்டு இரண்டாம் கட்டிற்கு ஓடி வந்து மீண்டும் வரவேற்பாள். எல்லோரையும் அக்கறையாக விசாரிப்பாள்….நின்று கொண்டேதான். பின் அம்மாவும் பெரியம்மாவும் அடுக்களைக்குச் சென்று பேச ஆரம்பிக்க எஞ்சோட்டுப் பெண்ணான தங்கக்காவுடன் (பெரியம்மாவின் இளைய மகள்) எனக்கு நல்ல பொழுது போகும்.

சிறிது நேரத்தில் சாப்பிட அழைப்பாள். மொறு மொறு புஸ் பூரி, கிழங்குதான் பெரியம்மாவிற்குப் பிடித்த உணவு போலும். பெரும்பாலும் விருந்தினருக்கு அதுதான் செய்வாள் என கமலா ஆச்சி (அம்மாவின் அம்மா) சொல்வாள். “போதும் பெரியம்மா” என எழ ஆயத்தமாகையில், “ஏம்மோ ? (மோள்-மகள் என்பதை நாகர்கோவிலில் மோ என்பார்களாம்)இன்னொரு பூரி சாப்பிடேன். இல்லனா தோசை சுடட்டா மக்கா?” என வாஞ்சையோடு கேட்பாள். அவளுடைய தூக்கமின்மையையும் நிரந்தரக் களைப்பையும் என்னிடம் மட்டும் ரகசியமாகக் கதைத்துக் கொண்டிருக்கும் கருவளையங்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் அவளது முகத்தை வாழ்நாள்  முழுக்கக் குத்தகைக்கு எடுத்திருக்கும் புன்னகை.

வடிவீஸ்வரத்து ஆச்சிக்குக் காலை உணவின் போது இடையிடையே காபி குடிக்கப் பிடிக்கும். தாத்தா 10.30 மணிக்கு இஞ்சி டீ குடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவரின் தேவையறிந்துத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குவாள். அவளது ஓர்ப்படியான காந்தி பெரியம்மா துணி துவைப்பது, வீட்டைப் பெருக்குவது என நன்றாக ஒத்தாசை செய்வாள் .

எனக்குத் தெரிந்து வருடத்தின் எல்லா நாட்களும் விருந்தினர் இருப்பது அந்த வீட்டில்தான். இந்தப் பாழாய்ப் போன உறவினர்களுக்குப் போக்கிடம் இல்லையென்றாலோ, எங்கு போவது என்று தெரியவில்லை என்றாலோ அங்குதான் போய் நிற்பார்களோ என்ற சந்தேகமும் எரிச்சலும் உண்டு எனக்கு. எனவே பெரியம்மாவுக்கு அடுப்பங்கறையே இருப்பிடமாகிப் போனது. ஆச்சியும் அம்மாவும் கூட அடுப்படியில் வியர்க்க விறுவிறுக்க சமைத்து சோர்ந்திருப்பார்கள் என்றாலும், இப்படி சுசீலா பெரியம்மாவைப் போல வருடம் முழுக்கப் போகிற வருகிறவர்களுக்கெல்லாம் வடித்துக் கொட்ட வேண்டியது இருந்ததில்லை. விருந்தோம்பலை நான் போற்றாமலில்லை. ஆனால் அங்கு வரும் விருந்தினரின் எண்ணிக்கையைப் பார்த்து நான் கொண்ட மலைப்பின் வெளிப்பாடே இந்த எரிச்சல். பெரியம்மாவின் மீது நான் கொண்ட கரிசனமும் காரணமாய் இருக்கலாம்.

புகையினால் வரும் எரிச்சலையும் அயர்ச்சியையும் பொருட்படுத்தாமல், எப்போதும் எப்படி இவளால் மட்டும் எல்லோரையும் சிரித்த முகத்துடன் உபசரிக்க முடிகிறது? எல்லாப் பெண்களையும் போல் பிறந்த வீட்டில் ராணியாய் வளர்ந்த பெரியம்மா, பின்னாளில் தனக்கு குறுக்கைச் சாய்க்கக் கூட நேரம் கிடைக்கப் போவதில்லை என எண்ணிப் பார்த்திருப்பாளா? அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் ஏதேனும் உண்டா? சமையல் கட்டிலேயே இருப்பதால் இரண்டாம் கட்டான டி.வி அறையில் அவளை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்? அவள் அமர்ந்திருந்தே யாரும் பார்த்ததில்லை.

கால்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்து அமர்ந்திருக்கிறாள் என்றால் அது ஒரு விசேஷ வீடு என்று அர்த்தம். ஒவ்வொரு கல்யாண வீட்டின் மதிய விருந்து முடிந்ததும் செல்லையா பெரியப்பா, “என்னத்துக்கு இத்தன அயிட்டம் போடுதான்? எலயில எங்க எடமிருக்கு? ரசத்துல உப்பு, புளிப்பு, ஒரப்பு எல்லாத்தயும் தேட விட்டுட்டான். வத்தக்குழம்பு ஒரே எண்ண..சோறு வெத வெதையா இருந்துச்சு…….ஆனா பச்சடி அடிச்சு தூக்கிட்டாம்லா……இங்கதான் 2 நாள் கல்யாணச் சாப்பாடு போட்டு ஒடம்ப புண்ணாக்குதான்.   கேரளாவுல 8 மணிக்கு கல்யாணத்த முடிச்சு 11 மணிக்கு சோத்தப் போட்டு அடிச்சுப் பத்திருவான்….நாமெல்லாம் என்னத்த?” என்று சலித்துக் கொள்ளும் போது, அவர் பந்தியில் அனைத்து பதார்த்தங்களையும் ரசித்ததும் , பாயாசத்தை 2 முறை கேட்டு வாங்கிக் குடித்ததும் என் கண் முன் நிழலாடும். சுசீலா பெரியம்மா இதைக் கேட்டு ரகசியமாகச் சிரிக்க முற்படுவாள். எனினும் கன்னங்கள் உயர்ந்து கண்களைச் சிறிதாக்கும் அந்தச் சிரிப்பை மறைக்கத் திண்டாடித்தான் போவாள் பெரியம்மா. பெரியப்பா முத்தாய்ப்பாக, “இன்னும் நாளைக்கு சொதி போட்டுக் கொல்லுவானே…” என்று சலித்துக் கொள்ளும் போது பெரியம்மாவுக்குத் தெரியும்…வழக்கம்போல் இஞ்சிப் பச்சடியையும் உருளைக்கிழங்கு சிப்ஸையும் கேட்டு வாங்கிச் சப்புக் கொட்டப் போகிறார் என்று.

வடிவீஸ்வரத்து ஆச்சி பெரியம்மாவைப் பிள்ளைகளோடு கொட்டரத்தில் இருக்கும் பெரியம்மாவின் அம்மா வீட்டுக்கு விடுமுறைக்குப் போகச் சொன்னால், பிள்ளைகளை அங்கு கொண்டு விட்டு இவள் மட்டும் மாலையில் திரும்பி ஆச்சிக்குத் துணையிருப்பாளாம். “மாமியாரைத் தனியா விட்டுட்டுப் போற அந்தச் சோலியே கிடையாது” என்று பெருமை தாங்காது பெரியப்பாவுக்கு. ஒரு நாள் கூட அவள் யாரையும் குறைபட்டுக் கொண்டதேயில்லை எனக் கேள்விப்படுகையில், “இப்படியும் ஒரு மனுஷியா?” எனத் தோன்றுகிறது.

சில வருடங்களுக்கு முன் வடிவீஸ்வரத்து ஆச்சியும் சென்ற வாரம் தாத்தாவும் இறைவனடி சேர, கொஞ்சம் கலங்கித்தான் போனாள் பெரியம்மா. தாத்தா இறந்த இரண்டு நாட்களுள் ஏற்கனவே உடல் நலமில்லாமல் இருந்த காந்தி பெரியம்மாவும் தவறியது பேரிடியாய் இறங்கியது பெரியம்மாவுக்கு. தன் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில் இப்போது காந்தி பெரியம்மவின் பிள்ளைகளைக் கரைச் சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், அவர்களைப் பாசப் பிணைப்புடன் கவனித்துக் கொள்ளும் பாங்கும் வானுறையும் தெய்வம் வையத்துள் உறையும் நிலைதானே !

அந்த அடுக்களைக்கெனப் பிறப்பெடுத்து அதற்காகவே நேர்ந்து விடப்பட்டவள் போல ஜீவிக்கும் பெரியம்மாவுக்கு யாரேனும் ஒருவேளையாவது தோசை சுட்டுத் தந்திருப்பார்களா? இனி யார் தருவார்கள்? அடுத்த முறை அவளைப் பார்க்கையில் ஒரு காப்பியாவது போட்டுக் கொடுத்து விட்டுச் சொல்ல வேண்டும், “உன் உடம்பையும் கொஞ்சம் பாத்துக்க பெரியம்மா….” என்று.

- சோம.அழகு

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic