கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பா.ஜ.க சார்பாக திப்பு ஜெயந்தி தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்துள்ளது.
கடந்த வருடம் முதல் கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வருடம் மடிக்கேரியில் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழாவின் போது வன்முறை ஏற்பட்டு 2 பேர் கொல்லப்பட்டனர். திப்பு ஜெயந்தி விழாவிற்கு பா.ஜ.க உட்பட பல்வேறு ஹிந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்வருடமும் திப்பு ஜெயந்தியை கொண்டாடுவதில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.கவின் மாநில தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா கூறியதாவது, திப்பு ஜெயந்தியை கொண்டாடுவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால் பா.ஜ.க சார்பில் திப்பு ஜெயந்தி தினத்தன்று கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படும். கடந்த வருடம் பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கடந்த வருடம் நடைபெற்ற திப்பு ஜெயந்தியைன் போதும் சில கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற கொலை சம்பவங்கள் இவ்வருடமும் தொடர்கதையாகிப்போயுள்ளது. இக்கொலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேச விரோதிகள்தான் இக்கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டிருப்பார்கள் என நாங்கள் சந்தேகிக்கின்றோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திப்பு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க மாநிலம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Write comments