500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று பா.ஜ.க அரசு அறிவித்து ஒரு மாதம் ஆகியுள்ளது. இந்நிலையில் வங்கிகளிலும் ATM களிலும் இன்னும் போதிய பணம் வந்து சேரவில்லை என்ற புகார் எழுந்துகொண்டே இருக்கிறது. ATM களின் முன் நீண்ட வரிசைகளும் தங்களது பணத்தை எடுக்க மக்கள் படும் கஷ்டங்களும் இன்னும் குறைந்த பாடில்லை. முன்னதாக ஓரிரு வாரங்களில் இந்த நிலை மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை இன்னும் சீரடையவில்லை. மாறாக இது இன்னும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முடிவினால் ஏறத்தாழ 4 லட்சம் வேலை இழப்பு ஏற்படும் என்று அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவால், ரியல் எஸ்டேட், கட்டுமானம், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் e-commerce எனப்படும் கணினி வணிகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. E-commerce வணிகத்தில் 70% Cash on Delivery எனப்படும் முறையிலேயே இந்திய மக்கள் பொருட்களை வாங்குகின்றனர். தற்போதுள்ள பண நெருக்கடியினால் வருகிற மாதங்களில் இவ்வகையில் பொருட்களை வாங்குபவர் 20% குறைவார்கள் என்று கருதப்படுகிறது. சொகுசு பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனங்களும் இந்த பணத்தட்டுப்பாட்டால் பெரிதளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நாடெங்கும் தினக்கூலி செய்து வருபவர்களில் பலர் தற்போதே தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இது போன்று அத்தியாவசிய பொருட்கள் அல்லாதவற்றை உற்பத்தி செய்து வருபவர்களும் இந்த பணதட்டுப்பாட்டல் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் பிரபலமான கவரிங் நகை உற்பத்தி மற்றும் விற்பனை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதன் உற்பத்தியாளர்கள் தங்களின் நிலை குறித்து கூறுகையில், தங்களது பொருட்கள் பெரும்பாலும் ரயில்களிலும் சிறு கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தன என்றும் மக்கள் பெரும்பாலும் இந்த பொருட்களை பணம் கொடுத்தே வாங்கி வந்தனர் என்றும் தற்போதுள்ள பணத்தட்டுப்பாட்டால் தங்களின் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதே போன்று நெசவுத்தொழிலும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. பல உற்பத்தியாளர்கள் தங்களது பணியாட்களிடம் நிலைமை சரியாக மூன்று நான்கு மாதங்கள் ஆகும் என்று கூறியதாகவும் இதனையடுத்து பலர் தங்களது கிராமங்களுக்கே சென்றுவிட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Write comments