தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சி அமைக்க திமுக, அதிமுக.,வின் ஆதரவை கேட்க மாட்டோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :
அனைவருக்கும் வேலை, முற்றிலும் ஊழலை ஒழிப்பது, அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், இருக்க இடம் போன்றவற்றை அளித்து வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது ஆகியனவே எங்கள் அரசின் கொள்கைகளாக இருக்கும். இதற்கு முன் இருந்தவர்கள் வீடு கட்டி கொடுத்திருக்கலாம். ஆனால் பெரிய அளவிலான பணத்தை ஊழல் செய்து கட்டி கொடுத்துள்ளனர்.
அதிக கிராமங்கள் நிறைந்த தொகுதி என்பதாலேயே விருத்தாச்சலம், ரிஷிவந்தியத்திலிருந்து தொகுதியை மாற்றி உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறேன். கடந்த முறை வெற்றி பெற்றதை போல் இந்த முறையும் வெற்றி பெறுவேன். நான் மக்களிடம் இருந்து ஒரு பைசா கூட கொள்ளையடிக்கவில்லை. ஊழல் இல்லாத அரசு அமைக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைத்துள்ளேன். பா.ஜ., அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எனக்கு முதல்வர் பதவியுடன் பணமும் கொடுக்க முன்வந்து என்னிடம் பேரம் பேசின. ஆனால், நான் மக்கள் நல கூட்டணியையே தேர்வு செய்தேன்.
ஜெயலலிதா அல்லது கருணாநிதி வெற்றி பெறுவார்கள் என கருத்து கணிப்புக்கள் கூறினாலும் மக்களின் தீர்ப்பு என்ன என்பதை மே 19 அன்று பாருங்கள். திமுக, அதிமுக.,விற்கு மக்கள் ஓட்டளிப்பது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம். உடல்நிலை குறித்து என்னிடம் கேட்பவர்கள் இதே கேள்வியை முதலில் ஜெயலலிதாவிடமும், கருணாநிதியிடமும் கேட்கட்டும். அப்படி கேட்க முடியுமா?
தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ள ஜெயலலிதாவின் அரசு "ஹம்பக்" அரசு. அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இந்த இலவசங்களை அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நாங்கள் ஆட்சி அமைக்க திமுக, அதிமுக.,வின் ஆதரவை கேட்க மாட்டோம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments