உத்தரகண்டில் ஜனநாயகம் வென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹரீஷ் ராவத் அரசு வெற்றி பெற்றிருப்பதாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை பிறப்பித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில் ராகுல் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
அவர்கள் (மத்திய அரசு) மிகவும் மோசமான காரியத்தை செய்தனர். நாங்கள் எங்களால் முடிந்த சிறப்பான பணிகளை செய்தோம். உத்தரகண்டில் ஜனநாயகம் வென்றுவிட்டது.
இதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி பாடம் கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். நமது நாட்டு மக்களும், நமது நாட்டை உருவாக்கியவர்களால் கட்டமைக்கப்பட்ட அமைப்புகளும், ஜனநாயகம் கொலை செய்யப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அந்த பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் அமளி:
இதனிடையே, மக்களவையில் உத்தரகண்ட் விவகாரத்தை முன்வைத்து மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் சரமாரியாக குற்றம்சாட்டி பேசினர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட தகவலை மக்களவைக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். பிறகு அவர் பேசியபோது, மத்திய அரசு இனிமேல் அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை பயன்படுத்தாது என்றும், ஜனநாயகத்தை கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடாது என்றும் நம்புவதாக குறிப்பிட்டார். மல்லிகார்ஜுன கார்கேயின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களும் மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "மத்திய அரசு இனிமேல் இத்தகைய தவறான மற்றும் மோசமான செயல்களில் ஈடுபடாது என நம்புகிறேன்' என்றார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மக்களவையில் அமளி ஏற்பட்டதால், உணவு இடைவேளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments